இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் நிலையில் 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.
ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் அவர் காயத்தைத் தவிர்ப்பதற்காக 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்தார். இந்நிலையில் காயத்திற்கு பயந்து கொண்டு ஜஸ்ப்ரித் பும்ராவை இந்தியா 5 போட்டிகளிலும் விளையாட வைக்காமல் இருப்பது தவறான அணுகுமுறை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் பெல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பும்ரா கண்டிப்பா ஆடனும்:
ஒருவேளை பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினால் இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பெல் பேசியது பின்வருமாறு. “இந்த கோடைகாலத்தில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாமல் போனால் இங்கிலாந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்”
“அவரைப் போன்ற தரமான பவுலரை நீங்கள் பாதுகாக்க விரும்புவீர்கள். ஆனால் இது போன்ற மிகவும் முக்கியமான தொடரில் பும்ரா ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார். அத்துடன் இங்கிலாந்து அணி சேசிங் செய்வதில் நெருப்பு போல விளையாடும் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக இயன் பெல் கூறியுள்ளார்.
நெருப்புடன் நெருப்பாக மோத:
எனவே நெருப்புடன் நெருப்பாக மோத வேண்டுமெனில் இந்தியா குல்தீப் யாதவை விளையாட வைப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பெல் மேலும் பேசியது பின்வருமாறு. “குல்தீப் அழகாக பவுலிங் செய்கிறார். இருபுறமும் பந்தை சுழற்றும் திறனைக் கொண்டுள்ள அவர் இங்கிலாந்தின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்”
இதையும் படிங்க: 8 வருடத்தில் வெறும் 13.. அஸ்வினும் இல்லாத சமயத்தில் குல்தீப்புக்கு அநியாயம் பண்ணாதீங்க.. ஃகைப் பதிவு
“ரவீந்திர ஜடேஜாவுக்கு உதவி செய்யக்கூடிய வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுக்கலாமா? அல்லது விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட குல்தீப் யாதவை விளையாட வைக்கலாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். குல்தீப்பை விளையாட வைப்பது நெருப்புடன் நெருப்பை மோதுவதைப் போல அமையும்” என்று கூறினார். இதற்கிடையே பர்மிங்கம் மைதானத்தில் இந்தியா ஒரு முறை கூட வென்றதில்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



