IND vs WI : வாழ்வா சாவா போட்டியிலாவது இஷானை கழற்றி விட்டு அந்த பயமற்றவக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் மீண்டும் கோரிக்கை

Wasim Jaffer
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத சூழ்நிலையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கிய இந்தியாவின் பவுலிங் ஓரளவு சிறப்பாகவே இருக்கிறது. ஆனாலும் பேட்டிங்கில் தான் முதல் போட்டியில் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை பெற்றுக் கொடுத்த இளம் வீரர்கள் 2வது போட்டியில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை பதிவு செய்ய தவறினர்.

அதனால் பலவீனமான வெஸ்ட் இண்டீஸிடம் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. எனவே தரவரிசையில் தங்களின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் முக்கியமான 3வது போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற லட்சசியத்துடன் களமிறங்க உள்ளது.

- Advertisement -

வாசிம் ஜாபர் கோரிக்கை:
ஒருவேளை அப்போட்டியில் தோற்று 3 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை இழந்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் ஒரு டி20 தொடரில் தோற்று இந்தியா மற்றுமொரு அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலைமையில் உள்ளது. முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கிய திலக் வர்மா மட்டுமே சவாலான பிட்ச்சில் வெற்றிக்கு போராடினார். அவரை தவிர்த்து தடுமாறிய இதர பேட்ஸ்மேன்களில் அதிரடியான துவக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் வீரர் இசான் கிசான் 6, 27 என 2 போட்டிகளிலுமே குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து அசத்திய இஷான் கிசான் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வருவதால் இந்த வாழ்வா – சாவா போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 15 டி20 இன்னிங்ஸில் ஒருமுறை கூட 40 ரன்களை தாண்டாத இஷான் கிசான் மொத்தமாக இதுவரை 29 போட்டிகளில் 686 ரன்களை 24.5 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் சமீப காலங்களாகவே அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதிரடியாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் ஐபிஎல் 2023 சீசனில் உச்சகட்டமாக 625 ரன்களை குவித்து சரித்திரம் படைத்து இதே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சதமடித்து நிறைய சாதனைகளை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எனவே ஐபிஎல் தொடரில் அசத்திய திலக் வர்மா அறிமுகமாக வாய்ப்பு பெற்று இந்த தொடரில் அசத்துவது போல் பயமின்றி அடித்து நொறுக்கக்கூடிய ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று கடந்த போட்டியிலேயே கேட்டுக்கொண்டஅவர் இது பற்றி மீண்டும் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இசான் கிசான் தடுமாறுகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்பதால் அவருக்கு சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் தமக்கு கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் வலுவான கம்பேக் கொடுக்கலாம். எனவே அவருடைய இடத்தில் நான் எந்தவித சந்தேகமுமின்றி யசஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர். குறிப்பாக வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலிங்க்கு எதிராகவும் அசத்தும் திறமை அவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க:சாம்சன் ஏமாத்திட்டாரு – ராகுல் டிராவிட் தகுதியற்றவர், டி20 அணிக்கு அவர பயிற்சியாளரா போடுங்க – டேனிஷ் கனேரியா விமர்சனம்

“அத்துடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அதில் என்ன செய்கிறார் என்பதை ஏன் பார்க்க கூடாது? சொல்லப்போனால் டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மேலும் திலக் வர்மா போன்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்து புதிய காற்றை சுவாசிக்கும் முயற்சிக்கும் நீங்கள் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement