வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இந்த தொடரில் பொறுப்புடன் விளையாட வேண்டிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி முதல் போட்டியில் 150 ரன்களை கூட சேசிங் செய்யாமல் 2வது போட்டியில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸிடம் அவமான தோல்விகளை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முன்னதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் சரி இந்த தொடரிலும் சரி சோதனைகள் என்ற பெயரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்யும் மாற்றங்கள் நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் பயிற்சியாளராக பொறுப்பேற்ற 2021 முதலே பெரும்பாலான சமயங்களில் சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் மாற்றங்கள் பெரிய அளவில் வெற்றிகளை கொடுக்கவில்லை. மாறாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவுக்கு தோல்வியையே கொடுத்தது.
சாம்சன் ஏமாத்திட்டாரு:
அதனால் 2023 உலக கோப்பையுடன் பதவி காலம் முடிவடையும் அவரை அத்தோடு விட்டுவிடுங்கள் என்று நிறைய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் ராகுல் டிராவிட் அதிரடியாக விளையாடும் டி20 கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். எனவே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் கோப்பையை வென்று வெற்றிகரமான பயிற்சியாளராக திகழும் ஆஷிஷ் நெஹ்ரா இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக அறியப்படும் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவியாக இருக்க சரியானவராக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“இந்த தொடரில் ஏன் இந்தியா போதுமான அதிரடியை காட்டவில்லை? ஐபிஎல் தொடரில் ஆஷிஷ் நெஹ்ரா இருப்பதால் ஹர்திக் பாண்டியா நிறைய வெற்றிகளை சாதித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்தியா இன்னும் சற்று அதிரடியான அணுகு முறையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பயிற்சியாளரின் வேலை அவசியமாகும். ராகுல் டிராவிட் உலகத்தரமாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் டி20 அணிக்கு பயிற்சியாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். ஏனெனில் அவர் மிகவும் மெதுவாக செயல்படக் கூடியவர்”
“மறுபுறம் ஆஷிஷ் நெஹ்ரா தொடர்ச்சியாக களத்திலிருந்து ஏதேனும் செய்திகளை அனுப்பி ஊக்கத்தை கொடுத்துக் கொண்டிருப்பார். அவர் வாய்ப்பு பெற வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அதே போல இந்த தொடரில் திலக் வர்மாவை தவிர்த்து ஏனைய அனைத்து பேட்ஸ்மேன்களுமே சுமாராக செயல்பட்டு வருவது தோல்விகளுக்கு காரணமானது. குறிப்பாக ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காத பரிதாபங்களை சந்திக்கும் சஞ்சு சாம்சன் இந்த சுற்றுப்பயணத்தில் கிடைத்த 4 வாய்ப்புகளில் ஒன்றில் மட்டுமே அரை சதமடித்துளார்.
அதிலும் குறிப்பாக இந்த டி20 தொடரில் 2 போட்டிகளிலுமே சொற்ப ரன்களில் அவுட்டான அவர் ஆதரவு கொடுத்த தங்களைப் போன்றவர்களை தலைகுனிய வைப்பதாகவும் டேனிஷ் கனேரியா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்துள்ளனர். ஏனெனில் பலரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இந்திய அணி மீது புகார் தெரிவித்தனர். அதனால் தற்போது இந்தியா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது”
இதையும் படிங்க:IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோரை பின்னுக்கு தள்ளிய – ஹார்டிக் பாண்டியா
“அதில் எப்போது நீங்கள் ரன்கள் அடிப்பீர்கள் சஞ்சு சாம்சன்? தற்போது அவருக்கு நிறை வாய்ப்புகள் கிடைத்து விட்டது. அவரை ஆதரித்து தொடர்ந்து வாய்ப்புகளை கொடுங்கள் என்று இந்திய அணியை விமர்சித்தவர்களில் நானும் ஒருவராக இருந்தேன். இருப்பினும் தற்போது கிடைத்த வாய்ப்புகளை பெரும்பாலும் அவர் பயன்படுத்தவில்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் கோப்பையை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.