ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 129 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
கலாய்த்த வாசிம் ஜாபர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ள நிலையில் இங்கிலாந்து 99% வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
மேலும் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 5 தோல்விகளை பதிவு செய்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட தொடரில் 5 தோல்விகளை பதிவு செய்த முதல் நடப்பு சாம்பியன் அணி என்ற மோசமான உலக சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் ஜோஸ் பட்லர் போன்ற தரமான அதிரடி வீரர்கள் இருந்தும் அவர்கள் மோசமாக செயல்பட்டதால் தற்போது இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடுகிறது.
அதை விட இந்த உலகக்கோப்பையின் புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வு செய்யப்பட உள்ளன. அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து 10வது இடத்தில் இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செமி ஃபைனல் வாய்ப்பு தவறினாலும் இப்போதும் உங்களால் 7வது நம்பர் பஸ்ஸை பிடித்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும் என்று மைக்கேல் வாகனை ட்விட்டரில் வாஷிம் ஜாபர் கலாய்த்துள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: கபில் தேவ் செஞ்சத இப்போ அவர் செய்றாரு.. இந்திய பவுலருக்கு கவாஸ்கர் அசத்தலான பாராட்டு..
“உற்சாகமாக இருங்கள் மைக்கேல் வாகன். இப்போதும் இங்கிலாந்து டாப் 7 இடங்களுக்குள் இந்த உலகக்கோப்பையை நிறைவு செய்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெற முடியும் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அதாவது இலங்கையிடம் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து தங்களுடைய மொத்த வெறியையும் இந்தியா மீது இறக்கி இப்போட்டியில் வெல்லும் என்று மைக்கேல் வாகன் ஏற்கனவே பதிவிட்டிருந்தார். அதற்கு தற்போது வாஷிம் ஜாபர் வழக்கமான பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.