வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் இந்தியா ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 150 ரன்களை துரத்தும் போது மிகவும் சவாலான பிட்ச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 145/9 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது.
அந்த போட்டியில் இஷான் கிசான் 6, சுப்மன் கில் 3, சூரியகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அதிரடியாக விளையாடிய இளம் வீரர் திலக் வர்மா 39 (22) ரன்களை எடுத்தார். அதிலும் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு தன்னுடைய கேரியரை துவக்கிய அவர் போல கவர்ஸ் திசையில் அடித்த சிக்ஸர் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.
சவாலான பிட்ச்சில் அதிரடி:
அந்த வகையில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 39 (22) ரன்களை 177.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 2 அபாரமான கேட்ச்சும் பிடித்து அறிமுகப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளை அள்ளினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு இந்த வருடமும் அதிரடியாக செயல்பட்ட காரணத்தால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவைப் போல மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேனாகவும் துடிதுடிப்பான ஃபீல்டராகவும் செயல்படும் அவர் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அப்போட்டியில் சவாலான பிட்ச்சில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் திலக் வர்மா மட்டுமே எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ததாக முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் பாராட்டியுள்ளார். குறிப்பாக அறிமுக போட்டியிலேயே க்ளப் பவுலர்களை அடிப்பது போல 3 சிக்சர்களை அடித்து அசத்திய அவர் இன்னும் கொஞ்ச நேரம் நின்று 50 – 60 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும் என தெரிவிக்கும் வாசிம் ஜாஃபர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“அவர் தன்னுடைய அறிமுக போட்டியில் எந்தவித பதற்றமும் இல்லாமல் கவரும் வகையில் செயல்பட்டார். தன்னுடைய இன்னிங்ஸை அவர் துவங்கிய விதம் ஏதோ ஒரு உள்ளூர் தொடரில் கிளப் அல்லது தன்னுடைய மாநில அணிக்காக அசால்டாக அடிப்பது போல் இருந்தது. அந்தளவுக்கு அவர் விளையாடி ஆட்டத்தில் எந்த விதமான அழுத்தமும் இல்லை. அப்படி அறிமுக போட்டியிலேயே பதறாமல் விளையாடும் அளவுக்கு மனதளவில் வலுவாக இருப்பது அவரிடமுள்ள நல்ல விஷயமாகும்”
“அதை விட அந்த சவாலான பிட்ச்சில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் மட்டுமே எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் கச்சிதமாக செயல்பட்டார். மேலும் பெரிய ஷாட்களை மட்டுமல்லாமல் தேர்ட்மேன் திசையில் அடித்த ஷாட்டுகள் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை காட்டியது. ஆனால் அப்படி நல்ல துவக்கத்தை பெற்றும் இன்னும் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்காததற்காக அவர் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்”
இதையும் படிங்க:இந்திய பவுலிங்கின் விராட் கோலியான அவர் கம்பேக் கொடுத்துட்டாரு, இனிமேல் நமக்கு வெற்றி தான் – ஹர்பஜன் உற்சாக பேட்டி
“ஒருவேளை அவர் 50 அல்லது 60 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்தியா எளிதாக வென்றிருக்கும். இருப்பினும் நல்ல துவக்கத்தை பெற்ற சஞ்சு சாம்சன் ரன் அவுட்டானது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் இருக்கும் ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.