இந்திய பவுலிங்கின் விராட் கோலியான அவர் கம்பேக் கொடுத்துட்டாரு, இனிமேல் நமக்கு வெற்றி தான் – ஹர்பஜன் உற்சாக பேட்டி

Harbhajan Singh
- Advertisement -

சர்வதேச அளவில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா இருதரப்பு தொடர்களில் அசத்தினாலும் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. அதனால் சந்தித்துள்ள கடுமையான விமர்சனங்களை வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை வென்று பதிலடியாக கொடுத்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது.

இருப்பினும் அந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா ஃபிட்டாகி களமிறங்காமல் போனால் இந்தியா நிச்சயமாக தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் போட்டியின் எந்த நேரத்திலும் யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படுகிறார்.

- Advertisement -

ஹர்பஜன் உற்சாகம்:
அதனால் குறுகிய காலத்திலேயே முதன்மை பாவுலராகவும் வேகப்பந்துவீச்சு துறையின் முதுகெலும்பாகவும் உருவெடுத்துள்ள அவர் கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறினார். அவர் அப்படி வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாமல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த வகையில் கடந்த 10 மாதங்களாக குணமடைந்து வந்த அவர் தற்போது ஒரு வழியாக பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையாக ஃபிட்டாகியுள்ளதால் விரைவில் துவங்கும் அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக களமிறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பலமாகவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் பேட்டிங் துறையில் விராட் கோலி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவாரோ அதற்கு நிகராக பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றக்கூடியவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே பந்து வீச்சு துறையின் விராட் கோலியாக கருதப்படும் பும்ரா குணமடைந்துள்ளதால் 2023 உலகக் கோப்பை உட்பட அடுத்து வரும் தொடர்களில் இந்தியா வெற்றிகரமாக செயல்படும் என நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன் காயமடைந்த அவர் மீண்டும் விளையாடுவதற்காக அனைவரும் காத்திருக்கிறோம். அதில் கம்பேக் கொடுத்துள்ள அவர் நேரடியாக கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே காயத்திலிருந்து குணமடைந்து இந்தியாவின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜஸி”

“இந்த நிலையில் ஜஸி (பும்ரா) மீண்டும் காயத்தை சந்திக்க மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவரை இந்திய அணியில் நாம் மிகவும் மிஸ் செய்தோம். குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய தொடர்களிலும் அவர் இல்லாததன் பின்னடைவை நாம் பார்த்தோம். அதனால் இதற்கு முன்பு சொன்னதையே நான் இப்போதும் சொல்கிறேன். அதாவது இந்தியாவின் பேட்டிங்கை பற்றி நாம் பேசும் போது விராட் கோலி முதன்மையானவராக இருப்பார் அதே போல பவுலிங் துறையில் விராட் கோலி இருப்பாரானால் அது ஜஸ்பிரித் பும்ரா ஆவார். அவரை தவிர்த்து பந்து வீச்சில் வேறு பெரிய பெயர் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : நாட்டுக்காக காயத்துடன் பயிற்சியை துவக்கிய கேன் வில்லியம்சன் – 2023 உ.கோ விளையாடுவாரா, வெளியான அப்டேட் இதோ

அவர் கூறுவது போல கடந்த 2016க்குப்பின் இஷாந்த் சர்மா, உமேஷ் யதாவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் மட்டுமின்றி தற்போது முகமது சிராஜ் போன்ற பவுலர்களையும் மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக செயல்படும் பும்ரா இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். எனவே அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி சொந்த மண்ணில் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement