இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப்போகும் 2023 ஐசிசி உலக கோப்பை துவங்குகிறது. அதில் களமிறங்கும் டாப் 10 கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2007 டி20 உலகக்கோப்பை, உலகக் கோப்பை செமி ஃபைனல் முதல் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பெரும்பாலான ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி வாகை சூடி வருகிறது. இருப்பினும் இம்முறை அந்த அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் குஜராதுக்காக விளையாடிய அவர் சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே காயத்தை சந்தித்து வெளியேறினார்.
கம்பேக் கொடுப்பாரா:
நவீன கிரிக்கெட்டில் 94 டெஸ்ட், 161 ஒருநாள், 87 டி20 போட்டிகளில் முறையே 8124, 6554, 2464 என 17000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் விராட் கோலிக்கு நிகரான நட்சத்திர ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 2019 உலகக்கோப்பையில் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் தொடர் நாயகன் விருது வென்று வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் ஃபைனலில் தோற்காத போதிலும் ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் முதல் உலகக் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை இழந்த கேன் வில்லியம்சன் தலைமையிலான இங்கிலாந்து மனம் தளராமல் போராடி 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்தளவுக்கு மிகவும் தரமான அவர் ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை விளையாட மாட்டார் என்று ஆரம்பத்திலேயே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தன்னுடைய மகள் கையால் வீசிய பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை துவக்கிய வில்லியம்சன் தற்போது முதல் முறையாக நியூசிலாந்து அணியுடன் இணைந்து முதன்மையான பயிற்சிகளை துவங்கியுள்ளார். தற்சமயத்தில் 50 – 70% மட்டுமே குணமடைந்துள்ள அவர் மௌன்ட் மௌங்கனி நகரில் துவங்கியுள்ள வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து அணியினருடன் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் பயிற்சிகளை துவங்கியுள்ளார்.
அப்படி இன்னும் முழுமையாக குணமடையாத போதிலும் நாட்டுக்காக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான பயிற்சிகளை செய்ய வந்துள்ளதாக கேன் வில்லியம்சன் சொன்ன வார்த்தைகள் மேஜிக்கை போல் இருப்பதாக நியூஸிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியது பின்வருமாறு. “அவர் பேட்டை கையிலெடுத்து பந்தை அடிப்பதை பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் தற்சமயத்தில் அவருடைய காயத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச அளவில் விளையாடுவது சரியான முடிவாக இருக்காது”
“இருப்பினும் இது குணமடைவதற்கான நல்ல பாதையாக அமையும். குறிப்பாக இந்த அணியில் நான் முதலீடு செய்துள்ளதால் அதில் விளையாட விரும்புகிறேன் என்று அவர் சொல்வதைக் கேட்பது மேஜிக் போல இருக்கிறது” என கூறினார். மேலும் காயத்திலிருந்து குணமடைவது பற்றி கேன் வில்லியம்சன் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியையும் அதில் புதிதாக சிலரையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முகாமில் நானும் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சொந்த ஊரான மௌன்ட் மௌங்கனியில் மீண்டும் விளையாடுவதற்கான சிறிய வேலைகளை துவக்கியுள்ளது சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:IND vs WI :இந்திய டி20 அணிக்கு இவரு ரொம்ப முக்கியம். அவரை சேர்த்தாலே டீம் வெயிட் ஆயிடும் – யார் அந்த வீரர்?
மொத்தத்தில் 1 வருடம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் இவ்வளவு குறுகிய காலத்திலேயே பயிற்சி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மொத்தத்தில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயிற்சிகளை செய்வதால் அவர் 2023 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.