
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரில் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. ஏனெனில் கடைசியாக நடைபெற்ற 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.
மறுபுறம் இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே தோற்ற இந்திய அணியை இம்முறை ஆஸ்திரேலியா எளிதாக தோற்கடிக்கும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் உண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு தான் அழுத்தம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஃஜாபர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தத் தொடரில் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு தான் அதிக அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கவில்லை”
“அது போக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் ஒரு தோல்வியை சந்தித்தால் ஆஸ்திரேலியாவின் தலைகள் குனியலாம். அவர்கள் அணியிலும் சில வயதான சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிடம் தோற்றால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இந்திய அணி தற்போது தோல்வியை சந்திக்க எதுவுமில்லை” என்று கூறினார்.
அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவருக்கு கிண்டலடிக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “வெளிப்படையாக இந்தியா தான் ஏதேனும் இழக்க வாய்ப்புகள் உள்ளது அவசியம். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தார்கள். அதனால் மற்றும் ஒரு தோல்வியை சந்திக்க அவர்களிடம் தெம்பு இருக்காது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஷமி எப்போது விளையாடுவார்? கோலி என்ன செய்யப் போறாருன்னு சொல்ல விரும்பல.. கேப்டன் பும்ரா
அதாவது நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா தான் மேற்கொண்டு தோல்வியை தாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார். அந்த வகையில் இரு அணிகளுக்கு மேல் இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2 அணிகளிலுமே உலக தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். எனவே வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.