இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. ஆனால் தற்போது நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேப் போல முகமது ஷமி இத்தொடரில் விளையாட தேர்வாகாததும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஷமி எப்போது:
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ஷமியை பிசிசிஐ கவனித்து வருவதாக பும்ரா தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தொடரில் கண்டிப்பாக அவர் விளையாடுவார் என்று பும்ரா கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் விராட் கோலி எடுத்த கடுமையான பயிற்சிகளில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி பாய் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கியுள்ளார். அவர் எங்களுடைய அணியின் முக்கியமான வீரர். அவர் மீது இந்திய அணி நிர்வாகம் நெருக்கமான கண்களை வைத்திருக்கும் என்று உறுதியாக சொல்வேன். எனவே விஷயங்கள் சரியாக விழுந்தால் அவர் இங்கே விளையாடுவதை உங்களால் விரைவில் பார்க்க முடியும்”
விராட் கோலி ஃபார்ம்:
“விராட் கோலியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நம்முடைய விளையாட்டின் ஒரு சிறந்த வீரர். அவருக்கு எந்த ஸ்பெஷலான உள்ளீடுகளையும் நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எங்களுடைய லீடர்களில் ஒருவர். அவருக்கு கீழ் தான் நான் இந்தியாவுக்காக விளையாட அறிமுகமானேன். அவருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது தெரியும்”
இதையும் படிங்க: கபில் தேவ் மாதிரி ஆரம்பிக்கலாம்.. 3 – 0 தோல்வி பிரச்சனையே இல்ல.. இது தான் காரணம்.. கேப்டன் பும்ரா பேட்டி
“உங்களுடைய கேரியரில் ஒரு சில தொடர்களில் அங்கே இங்கே மேடு பள்ளங்கள் அமையும். அது பரவாயில்லை. ஆனால் தற்சமயத்தில் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தயாராகும் விதத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவதற்காக காத்திருக்கிறார். அவர் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப்பற்றி அதிகமாக நான் சொல்லி பாழ்படுத்த விரும்பவில்லை. விராட் கோலி தற்போது நல்ல வடிவத்தில் தெரிகிறார்” என்று கூறினார்



