ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த ஒயிட் வாஸ் தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று தெரிய வருகிறது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பும்ரா அதை உறுதி செய்துள்ளார்.
கபில் தேவ் போல:
குறிப்பாக ஜாம்பவான் கபில் தேவ் போல வேகப்பந்து வீச்சாளரான தம்மால் இந்தியாவை நன்றாக வழி நடத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதற்கு நான் எப்போதும் ஆதரவு கொடுத்துள்ளேன். ஏனெனில் தந்திரோபாயங்கள் அடிப்படையில் அவர்கள் சிறந்தவர்கள்”
“பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் நிறைய ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். கபில் தேவ் போன்ற நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த காலங்களில் கேப்டன்ஷிப் ரோல் மாடல்களாக செயல்பட்டுள்ளார்கள். அதே போல நாமும் புதிய கலாச்சாரத்தை துவங்குவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
இந்தியா வெல்லும்:
மேலும் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வி இந்திய அணியை பாதிக்காது என்று பும்ரா தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் அந்த தொடரில் வெற்றியை சந்தித்திருந்தாலும் இங்கே 0லிருந்து தான் இத்தொடரை துவங்க வேண்டும். தோல்வியை சந்தித்தாலும் நீங்கள் ஜீரோவில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்”
இதையும் படிங்க: இது ஐபிஎல் இல்ல.. நண்பர்களா இருக்கவா வந்தீங்க.. நாட்டுக்காக பேசிய கம்பீருக்கு.. மைக்கேல் கிளார்க் ஆதரவு
“அது தான் கிரிக்கெட்டின் அழகாகும். டி20 உலகக் கோப்பை வென்றதால் மற்ற தொடர்களில் நாங்கள் திருப்தியடைவோம் என்று அர்த்தமல்ல. கண்டிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடினமான தொடரில் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்திருந்தோம். ஆனால் அங்கிருந்து நாங்கள் எந்த பளுவையும் எடுத்துச் வரவில்லை. தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கே நாங்கள் வித்தியாசமான மனநிலையுடன் வந்துள்ளோம். இந்தியாவில் சந்தித்த தோல்வியிலிருந்து நாங்கள் எந்த பொருளையும் எடுத்து வரவில்லை. நாங்கள் இங்கே நேர்மறையுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறினார்.



