மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பிக்கையுடன் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்ததால் மிகப்பெரிய ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.
குறிப்பாக தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங் துறையில் சுமாராக செயல்பட்டு 240 ரன்கள் மட்டுமே எடுத்த போதே பாதி வெற்றி பறிபோனது. மேலும் பவர் பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர்கள் 11 – 40 வரையிலான மிடில் ஓவர்களில் 1 விக்கெட்டை கூட எடுக்காமல் சுமாராக பந்து வீசியதால் மீதி வெற்றியும் பறிபோனது.
சரியா பயன்படுத்தல:
இந்நிலையில் உலகக் கோப்பையில் எதிரணிகளை தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய முகமது ஷமியை ஃபைனலில் ஏற்பட்ட பதற்றத்தில் கேப்டன் ரோஹித் சர்மா முன்கூட்டியே பயன்படுத்தி தவறு செய்ததாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்திலேயே முகமது சிராஜை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“அவர்கள் சற்று பதற்றமடைந்து விட்டனர். ஷமி இத்தொடரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்களை ரவுண்டு தி விக்கெட் திசையிலிருந்து அவுட்டாக்கியதை நான் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் அவருக்கு எதிராக டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று விட்டார். இந்த நேரத்தில் நீங்கள் ஷமி சில ஓய்ட் பந்துகளை வீசினார் என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் சிராஜ் 2 முதல் 3 ஓவர்களை வீசியிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவரிடம் ஸ்விங் இருந்தது”
“மாபெரும் ஃபைனலில் புதிய பந்தை ஷமியிடம் கொடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள கூடியது என்றாலும் சிராஜ் ஆரம்பத்திலேயே 2 – 3 ஓவர்கள் வீசியிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எதுவுமே வேலைக்கு ஆகவில்லை என்றால் தான் நீங்கள் ஷமியிடம் சென்றிருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இத்தொடரின் ஆரம்பம் முதலே பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டுமே பவுலிங்கை துவங்கி ஆரம்பகட்ட ஓவர்களை வீசினார்கள்.
இதையும் படிங்க: டி20 இந்திய அணியிலும் மறுக்கப்பட்ட வாய்ப்பு. யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்த ரியாக்ஷன் – விவரம் இதோ
ஆனால் ஃபைனலில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையால் சிராஜுக்கு பதிலாக ஷமிக்கு அதிக ஓவர்கள் கொடுக்கப்பட்டது. இது போக ரோகித் சர்மா 20 ஓவர்கள் வரை நின்று விளையாடியிருந்தால் இந்தியா இன்னும் கூடுதலான ரன்களை அடித்து வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.