- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பையில் ரோஹித், கோலி, ராகுலை விட அவர்தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் – வாசிம் அக்ரம் பாராட்டு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இத்தொடரின் கோப்பை வெல்வதற்காக ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் மோதவுள்ளன. இருப்பினும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்குத் தான் உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதாமல் இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு மவுசு எகிறியுள்ள நிலையில் கடைசியாக இதே மைதானத்தில் மோதிய போது இந்தியாவை முதல் முறையாக உலக கோப்பையில் தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அதே சமயம் ஏற்கனவே 7 சாம்பியன் பட்டங்களையும் கடைசியாக நடந்த 2018 ஆசிய கோப்பையை வென்று வெற்றிகரமான நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் தோல்வி அடையாமல் வெற்றிநடை போட்டு வருவதால் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். இது ஒரு புறமிருக்க கடந்த வருடம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றிய பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி கடைசி நேரத்தில் இந்தத் தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ளார்.

அதனால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தப்பித்து விட்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வம்பிழுத்து வருகிறார்கள். அதனால் கடுப்பாகியுள்ள இந்திய ரசிகர்கள் ரோகித் சர்மா, ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுப்பார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரோகித், கோலி, ராகுல் ஆகியோரை விட சூரியகுமார் யாதவ் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று அந்நாட்டின் ஜாம்பவான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சவாலான சூரிய:
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித், ராகுல், விராட் போன்றவர்கள் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் அபாரமானவர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் போது முதல் முறையாக அவரை பார்த்தேன். அப்போது 7, 8 ஆகிய இடங்களில் விளையாடிய அவர் ஒருசில ஷாட்களை சிறப்பாக விளையாடுவார். குறிப்பாக பைன் லெக் பகுதியில் பேட்டின் மிடில் பகுதியிலிருந்து அவர் அடிக்கும் ஷாட் கடினமான ஒன்றாகும்”

“அதன்பின் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கிய அவரை பார்ப்பது ரசனையாக இருக்கிறது. சுழல் மற்றும் வேகம் என அனைத்து வகையான பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொள்ளும் அவர் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். ஒருமுறை அவர் செட்டாகி விட்டால் 360 டிகிரியிலும் லேப், கொவ் கார்னர் என அனைத்து வகையான ஷாட்க்களையும் அடிக்கும் திறமை பெற்றுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் கடுமையாக உழைத்து 30வது வயதில் கடந்த வருடம் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் தனது திறமையால் ஒரு வருடத்திலேயே இந்திய வெள்ளைப் பந்து அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அனைத்து சூழ்நிலைகளிலும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ள இவர் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் எஞ்சிய அனைத்து வீரர்களும் சொதப்பிய போது 117 (55) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடியது அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் இருந்தே அவரோட பேட்டிங் வேறலெவலில் இருக்கு – இளம்வீரரை பாராட்டிய கே.எல் ராகுல்

அதேபோல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய இவர் 22 போட்டிகளிலேயே தரவரிசையில் இமாலய வளர்ச்சி கண்டு பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்கும் ஒரே இந்திய வீரராக பெருமை சேர்த்து வரும் அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -
Published by