ஆசிய கோப்பை 2023 : அடிக்கடி மாற்றங்கள் செய்தாலும் அதுல இந்தியா பலமா இருக்காங்க ஆனால் வெற்றி கஷ்டம் தான் – வாசிம் அக்ரம் பேட்டி

Wasim Akram
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் துவங்குகிறது. விரைவில் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாள் ஆகிய ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராவதற்கு உதவும் வகையில் இத்தொடர் நடைபெறுகிறது. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறை 8வது கோப்பையை முத்தமிட்டு ஆசிய சாம்பியனாக சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையில் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இத்தொடரில் 6 அணிகள் விளையாடினாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு தான் அனைவரிடமும் அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக உலகக் கோப்பையில் காலம் காலமாக தோல்விகளை பரிசளித்து வரும் இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிப்பதற்கு வெள்ளோட்டமாக இத்தொடரில் பாகிஸ்தான் செயல்படும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றார் போல் சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது.

- Advertisement -

வாசிம் அக்ரம் கருத்து:
அதனால் அடிக்கடி மாற்றங்கள் என்ற பெயரில் சோதனை நிகழ்த்துவது, கேப்டன்களை மாற்றுவது போன்ற குளறுபடிகளால் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை நிச்சயம் இம்முறை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் ஆசிய மற்றும் உலக கோப்பையில் தோற்கடிக்கும் என அந்நாட்டை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் அடிக்கடி மாற்றங்களை செய்தாலும் இப்போதும் இந்தியா சமநிலை நிறைந்த அணியாகவே இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆசிய கோப்பையில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவிக்கும் அவர் யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம் என்றும் கணித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமானது. அதற்கு எத்தனை பேர் ஆதரவு கொடுப்பார்கள், எத்தனை பேர் பார்ப்பார்கள், எவ்வளவு பேர் பின்பற்றுவார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதே தொடரில் மற்ற அணிகளும் விளையாடுகின்றன”

- Advertisement -

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 17 வீரர்கள் லிஸ்ட் இதோ – மிஸ் பண்ணியிருந்தா பாத்துக்கோங்க

“எனவே வங்கதேசம், இலங்கை போன்ற அணிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. தற்சமயத்தில் இந்திய அணிகள் வித்தியாசமானவற்றை முயற்சிக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் புதிய வீரர்கள் மற்றும் கேப்டன்கள் சோதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களிடம் சமநிலை நிறைந்த அணி இருக்கிறது. ஆனால் அதற்காக இந்தியா அல்லது எந்த அணியும் வெல்லும் என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் கடந்த முறை நாம் இந்தியா பாகிஸ்தான் ஃபைனலில் மோதும் என்று கணித்தோம். ஆனால் கடைசியில் இலங்கை வென்றது. எனவே அனைத்து அணிகளுமே தங்களுடைய நாளில் வெற்றி பெறக் கூடியவை” என்று கூறினார்.

Advertisement