அண்டர்-19 ஆசிய கோப்பை 2023 : 13 ரன்ஸ் 7 விக்கெட்.. நேபாளை ஊதி தள்ளிய இந்திய அணி மாஸ் வெற்றி

U19 IND vs NEP
- Advertisement -

துபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் 2023 அண்டர்-19 ஆசியக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணிக்கு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராஜ் லிம்பானி ஆரம்பத்திலிருந்தே துல்லியமாக பந்து வீசி மிகப்பெரிய சவாலை கொடுத்தார். அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தீபக் போஹரா 1, உத்தம் மகர் 0, கேப்டன் தேவ் கனல் 3 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டல் பவுலிங்:
அதற்கிடையே ஆராத்யா சுக்லா வேகத்தில் மற்றொரு துவக்க வீரர் அர்ஜுன் குமால் 7 ரன்னில் அவுட்டானதால் 17/5 என ஆரம்பத்திலேயே நேபாள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது இடைவெளி விடாமல் மீண்டும் தீபக் தும்ரே 0, திபக் போஹரா 7, திபெஷ் கண்டெல் 4, சுபாஷ் பண்டாரி 2, ஹேமந்த் தாமி 8 என அடுத்து வந்த அனைத்து வீரர்களையும் லிம்பானி தம்முடைய அதிரடியான வேகத்தால் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி கதையை முடித்தார்.

இறுதியில் ஆகாஷ் சந்த் 4* ரன்கள் எடுத்தும் 22.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நேபாள் வெறும் 52 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கள் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 9.1 ஓவரில் 3 மெய்டன் உட்பட 13 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அவருடன் ஆராதியா சுக்லா தம்முடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகளும் அர்சின் குல்கர்னி 1 விக்கெட்டும் எடுத்தனர். இறுதியில் 53 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் அர்சின் குல்கர்னி 1 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 43* (30) ரன்களும் ஆதர்ஷ் சிங் 13* (13) ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக நான் விளையாட யுவி சொன்ன அந்த வார்த்தைகள் தான் காரணம்.. ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி

அதனால் 7.1 ஓவரிலேயே 57/0 ரன்கள் எடுத்த இந்திய அண்டர்-19 அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று அசத்தியது. மேலும் கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா இந்த வெற்றியால் லீக் சுற்றில் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து கூடுதல் ரன் ரேட் பெற்றுள்ளது. அதனால் குரூப் ஏ புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

Advertisement