
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்கிற இலக்கினை மிக எளிதாக எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணியானது பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களையும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 64 ரன்களையும் குவித்தனர். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அதிரடி காண்பித்ததால் 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களையும், திலக் வர்மா 29 ரன்களையும் குவித்தனர். அதிலும் குறிப்பாக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு இந்த போட்டியில் பிரமாதமாக இருந்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த போட்டியில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பேட்டிங்கின் போது ஆறாவது வீரராக களமிறங்கிய அவர் 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 4 சிக்ஸர் என 49 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தனது தரத்தினை காண்பித்து வருகிறார்.
இதையும் படிங்க : இந்திய அணியிடம் இந்த போட்டியில் நாங்க தோக்க இதுவே காரணம்.. தோல்விக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் வருத்தம்
அதன் காரணமாக இனியும் இந்திய அணியுடன் தொடர்ச்சியாக பயணிப்பார் என்பது உறுதி. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே நிரந்தர இடத்தை பிடித்துள்ள வேளையில் தற்போது டி20 மற்றும் ஒருநாள் அணிகளிலும் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.