
கடந்த 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 558 ரன்கள் குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவருக்கு இந்த ஆண்டு பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது நான்காவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 55 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு இந்த போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் ஒரு ஓவர் வீசியிருந்த அவர் 11 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது இத்தனை ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
இதன்மூலம் அவரது 9 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் கரியேரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோத்தாலும் நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளோம்.. தோல்விக்கு பிறகு – அக்சர் படேல் பேட்டி
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 210 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களில் 209 ரன்களை குவிக்க 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.