இவர் தான் உண்மையான ஆல் இன் ஆல் அழகுராஜா, யாருமே படைக்காத சரித்திரம் படைத்த ஹஸரங்கா – ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

Wanindu hasaranga
- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் கோலாகலமாக நடைபெற்ற முடிந்துள்ளது. கடந்த ஜூலை 30ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் பங்கேற்ற 5 அணிகளில் 20 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் கால்லே டைட்டன்ஸ், தம்புலா அவ்ரா, கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் குவாலிஃபயர் 1 போட்டியில் கால்லே அணியை வீழ்த்திய தம்புலா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

LPL

- Advertisement -

இருப்பினும் எலிமினேட்டரில் யாழ்ப்பாணத்தை வீழ்த்திய கண்டி அணி குவாலிபர் 2 போட்டியில் மீண்டும் கால்லே அணியை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி கொழும்புவில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தம்புலா மற்றும் கண்டி அணிகள் மோதின. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தம்புலா அணி 20 ஓவர்களில் 147/4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆல் இன் ஆல் சாதனை:
அதிகபட்சமாக தனஞ்செயா டீ சில்வா 40 (29) ரன்களும் தமர விக்கிரமா 36 (30) ரன்களும் எடுக்க கண்டி சார்பில் அதிகபட்சமாக சதுரங்கா டீ சில்வா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 148 ரன்களை துரத்திய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் 26 (22) குசால் மெண்டிஸ் 44 (37) தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஏஞ்சேலோ மேத்தியூஸ் 25* (21) ஆசிப் அலி 19 (10) என முக்கிய வீரர்கள் அனைவரும் தேவையான ரன்களை எடுத்தனர். அதனால் தம்புலா சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தும் 19.5 ஓவரில் 151/5 ரன்கள் எடுத்த கண்டி 2023 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

Hasaranga

முன்னதாக இத்தொடரில் ஆரம்பம் முதலே கண்டி ஃபால்கார்ன்ஸ் அணியை நட்சத்திர இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதை விட சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் இத்தொடரில் பந்து வீச்சில் 10 போட்டிகளில் 19 விக்கெட்களை 5.51 என்ற துல்லியமான எக்கனாமியில் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை வென்றுள்ளார்.

- Advertisement -

அதற்கு நிகராக பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய அவர் பாபர் அசாம் (261), தினேஷ் சண்டிமால் (259), பெர்னாண்டோ (244) போன்ற முதன்மை பேட்ஸ்மேன்களை மிஞ்சி 10 போட்டிகளில் 279 ரன்களை 189.79 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்காக வழங்கப்படும் பச்சை தொப்பியையும் வென்றுள்ளார். அதே போல அதிக சிக்ஸர்கள் (14) அடித்த வீரர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை (189.79) கொண்ட வீரர் சிறந்த பவுலிங் சராசரியை (10.73) பந்து செய்த வீரர் சிறந்த எக்கனாமியை (5.51) கொண்ட வீரர் போன்ற அனைத்து சாதனைகளையும் படைத்துள்ள அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

Hasaranga

மொத்தத்தில் இந்த தொடரில் கேப்டனாக கோப்பையை வென்று பச்சை மற்றும் ஊதா தொப்பிகளையும் வென்று அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்டு சிறந்த பவுலிங் எக்கனாமி மற்றும் சராசரியை கொண்ட வீரராக தொடர் நாயகன் விருதையும் வென்று மிரட்டியுள்ள வணிந்து ஹஸரங்கா ஆல் ஏரியாவிலும் கில்லியாக ஆல் இன் ஆல் அழகுராஜா போல அபாரமாக செயல்பட்டுள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs IRE : என்னுடைய பர்ஸ்ட் மேட்ச்லயே இப்படி நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி – ரிங்கு சிங் பேட்டி

சொல்லப்போனால் உலகம் முழுவதிலும் நடைபெறும் ஏராளமான டி20 தொடர்களில் இப்படி ஒரு குறிப்பிட்ட தொடரில் ஒரே வீரர் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதுடன் கேப்டனாக கோப்பையையும் வென்றதில்லை எனலாம். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் கூட யாருமே ஒரே நேரத்தில் ஆரஞ்சு மற்றும் ஊதா வென்றதில்லை. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சரித்திர சாதனையை ஹஸரங்கா படைத்துள்ளது இலங்கை மற்றும் ஐபிஎல் தொடரில் அவர் இடம் வகிக்கும் பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement