வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியா தற்போது டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த பெரிய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அயர்லாந்து கத்துக்குட்டியாக இருப்பதாலும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையிலும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பெரும்பாலான சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2022 ஜூலையில் நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கும் 2023 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தொடரில் ஒரு வழியாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக களமிறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்த அவர் 2022 ஆசிய கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்காக முழுமையாக குணமடையாமல் அவசரமாக களமிறங்கி மீண்டும் ஓரிரு போட்டிகளிலேயே காயமடைந்து வெளியேறினார்.
பயிற்சியாளர் யார்:
அதனால் 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியே பரிசாக கிடைத்த நிலையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற இலங்கை தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட பும்ரா மீண்டும் அவசரமாக களமிறங்கி காயத்தை சந்திப்பதை தவிர்ப்பதற்காக மீண்டும் வெளியேறுவதாக பிசிசிஐ அறிவித்தது. அது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் முதல் முறையாக 11 மாதங்கள் கழித்து இத்தொடரில் களமிறங்குகிறார்.
மேலும் 2023 உலக கோப்பையில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இத்தொடரில் ஏற்கனவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் என்சிஏ இயக்குனராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிகமாக பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் கடந்த அயர்லாந்து டி20 தொடரிலும் நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரிலும் இந்தியாவின் பயிற்சியாளராக லக்ஷ்மண் செயல்பட்டார்.
இந்நிலையில் இந்த அயர்லாந்து டி20 தொடரில் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட மாட்டார் என்று கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக எம்சிஏவில் இயக்குனராக இருக்கும் அவர் ஏற்கனவே அங்கு காயத்திலிருந்து குணமடைந்து வரும் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை கவனிக்க வேண்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அதனால் அவருக்கு பதில் என்சிஏ பேட்டிங் மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக இருக்கும் சித்தான்சு கோட்டாக் மற்றும் சைராஜ் பகத்துலே ஆகியோர் இந்த அயர்லாந்து டி20 தொடரில் பும்ராவுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும் 2023 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்ற நிலைமையில் அதே சமயத்தில் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ருதுராஜ் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஆகஸ்ட் 18, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் அயர்லாந்து எதிரான இந்த டி20 தொடரில் பும்ரா நட்சத்திர ஜாம்பவான் பயிற்சியாளர் உதவி இல்லாமலேயே கேப்டனாக களமிறங்க உள்ளார்.
இதையும் படிங்க:அதை மட்டும் புரிஞ்சுக்கிட்டா நீ வேற லெவலில் வருவ, உம்ரான் மாலிக்கிற்கு – ஜாம்பவான் பிரையன் லாரா கொடுத்த அட்வைஸ் என்ன
அப்படி சுமார் 11 மாதங்கள் கழித்து அவர் கம்பேக் கொடுப்பது இந்த தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி இதோ:
ஜஸ்பிரிட் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கைக்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்ணோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷிதீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அஹ்மத் சஞ்சு சாம்சன்