ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் காயமடைந்து வெளியேறிய தமிழகத்தில் நடராஜனுக்கு பதிலாக ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று 140க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் பந்து வீசி முதல் முறையாக அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதனால் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் 2022 சீசனில் முழுமையாக 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை தெறிக்க விட்டு 21 விக்கெட்களை சாய்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சரித்திர சாதனையும் படைத்தார்.
அதனால் முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களுடன் இந்தியாவுக்காக கடந்த ஜூலையில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசி ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் கற்றுக் கொடுத்தாலும் வராத வேகத்தை கொண்டுள்ள அவரை இந்தியா சரியாக பயன்படுத்தத் தவறி விட்டதாக வாசிம் அக்ரம், பிரட் லீ போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
லாராவின் அட்வைஸ்:
அதை தொடர்ந்து மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று நல்ல லைன், லென்த் போன்றவற்றை ஓரளவு கற்று வந்த அவர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்களை எடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற பும்ராவின் சாதனையும் தகர்த்தார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் இந்த வருட ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 5 விக்கெட்களை 10.85 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்து சுமாராக செயல்பட்டதால் நிலையான வாய்ப்புகளை பெறாமல் தடுமாறுகிறார்.
இந்நிலையில் வேகத்தால் மட்டும் அனைத்தையும் சாதித்து விட முடியாது என்பதை புரிந்து லைன், லென்த் போன்ற விவேகங்களை கற்றுக் கொண்டால் உம்ரான் மாலிக் பெரிய அளவில் வருவார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார். குறிப்பாக வாசிம் அக்ரம் முதல் மார்ஷல் வரை அசுர வேகத்தில் வீசிய ஜாம்பவான் பவுலர்கள் ஒரு கட்டத்திற்கு பின் விவேகத்தை பின்பற்றியே நீண்ட காலம் வெற்றிகரமாக செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் அவற்றை ஹைதராபாத் அணியில் டேல் ஸ்டைனிடம் கற்றுக் கொள்ளுமாறு உம்ரான் மாலிக்கிற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவர். ஆனால் வேகத்தால் மட்டும் உலகின் சிறந்தவர்களை திணறடிக்க முடியாது என்பதை அவர் விரைவில் உணர வேண்டும். குறிப்பாக பந்தை கொண்டு விவேகத்துடன் ஏதேனும் வித்தியாசமாக செய்யும் திறனை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பின்வாங்க வேண்டிய நேரங்களை புரிந்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரங்களை புரிந்து கொள்ள வேண்டும். எனவே மிகவும் இளமையாக இருக்கும் அவருக்கு அதைக் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது”
“இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளும் நம்மிடம் இருக்கிறது. குறிப்பாக வாசிம் அக்ரம் அதி வேகத்தைக் கொண்டிருந்தார். மைக்கேல் ஹோல்டிங் மற்றும் மால்கம் மார்சல் ஆகியோர் அசுர வேகத்தை கொண்டிருந்தனர். ஆனால் தங்களுடைய கேரியரின் ஏதோ ஒரு தருணத்தில் வேகமாக பந்து வீசுவதை விட சாதூரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு அவர்கள் வந்தனர். எனவே அவர் டேல் ஸ்டைனுடன் இணைந்து பணியாற்றி முன்னேறினால் நிச்சயமாக இந்தியா உருவாக்கிய சிறந்த வீரர்களில் ஒருவராக வருவார்” என்று கூறினார்.
இதையும் படிங்க:IND vs WI : 4வது டி20 நடைபெறும் அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ
முன்னதாக கடந்த சில வருடங்களாக ஹைதராபாத் அணியில் பயிற்சியாளராக இருந்த பிரைன் லாரா தலைமையில் உம்ரான் மாலிக் விளையாடினார். இருப்பினும் தற்போது அவர் அந்த அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் பந்து வீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டையின் தொடர்ந்து செயல்பட உள்ளார். எனவே அவரிடம் உமரான் மாலிக் கற்றுக்கொள்ள வேண்டுமென லாரா கூறுவது குறிப்பிடத்தக்கது.