விடைபெறும் டிராவிட்? 2023 உ.கோ முடிந்ததும் நடைபெறும் ஆஸி தொடரில் புதிய கோச்.. வெளியான தகவல்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. அதன் காரணமாக 2011 போல சொந்த மண்ணில் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 3 வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா கத்துக்குட்டிகளான வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானையும் எளிதாக வீழ்த்தியது. மேலும் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்து வருகின்றனர்.

- Advertisement -

புதிய கோச்:
இந்த சூழ்நிலையில் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 2023 உலகக் கோப்பையுடன் நிறைவுக்கு வருகிறது. ஒரு வீரராக களத்தில் நங்கூரமாக பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் அளவுக்கு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2016இல் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக பொறுப்பேற்று அண்டர்-19 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு 2018இல் கோப்பையும் வென்றார்.

அதன் காரணமாக 2021இல் ரவி சாஸ்திரிக்கு பின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்களை செய்வது ரசிகர்களுக்கு பிடிக்காததாக இருக்கிறது. சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பையை தவிர்த்து அவரது தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை இந்தியா சந்தித்ததால் உங்களுடைய சேவை போதும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை முடிந்ததும் 2014 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் ராகுல் டிராவிட் பதவி காலம் நிறைவடைந்து வெளியேறுவதால் தற்போது என்சிஏவின் இயக்குனராக இருக்கும் மற்றொரு முன்னாள் ஜாம்பவான் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சோகத்தை கட்டுப்படுத்தவே முடில.. 2020இல் சொன்னாலும் அன்னைக்கே கடைசி நாளை குறிச்சுட்டேன்.. மனம் திறந்த தோனி

மறுபுறம் மேற்கொண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பாத ராகுல் டிராவிட் மீண்டும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்காமல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக கடந்த காலங்களில் தற்காலிக பயிற்சியாளராக இருந்த லக்ஷ்மன் அடுத்த சில வருடங்களுக்கு அப்பதவியில் நிரந்தரமாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மற்றவர்கள் விண்ணப்பித்தாலும் என்சிஏவின் இயக்குனராக இருந்து வீரர்களின் திறமைகளை தெரிந்துள்ளதால் லக்ஷ்மனையே பிசிசிஐ தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

Advertisement