IPL 2023 : நீங்க இப்டி செய்விங்கன்னு எதிர்பாக்கல – தோனியின் 2 கேப்டன்ஷிப் தவறுகளை நேரடியாக விமர்சித்த சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. 2 மாதங்களுக்கு மேலாக ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ள இத்தொடரின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை இப்போதே வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை தொடக்க வீரர் ருத்ராஜ் கைக்வாட் அதிரடியாக 92 (50) ரன்கள் குவித்த உதவியுடன் 10 ஓவரில் 100+ ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

GT vs CSK MS Dhoni

- Advertisement -

ஆனால் அவரை தவிர்த்து டேவோன் கான்வே 1, ராயுடு 12, பென் ஸ்டோக்ஸ் 7, ரவீந்திர ஜடேஜா 1, சிவம் துபே 19 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இறுதியில் தோனி 14* (7) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் சென்னை 178/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் சார்பில் அல்சாரி ஜோசப், முகமது ஷமி, ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 63, சாய் சுதர்சன் 22, விஜய் சங்கர் 27, சஹா 25 என முக்கிய பேட்ஸ்மேன் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

சேவாக் விமர்சனம்:
மறுபுறம் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் சொதப்பி 20 – 30 ரன்களை குறைவாக எடுத்தது, பந்து வீச்சில் இம்பேக்ட் வீரராக சேர்க்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே 3.2 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கியது போன்றவை சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அந்த போட்டியின் மிடில் ஓவர்களில் மொயின் அலியை பயன்படுத்தியிருந்தால் துஷார் தேஷ்பாண்டேவை அணிக்குள் கொண்டு வரும் தேவையே இருந்திருக்காது என்று முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார்.

csk vs gt

அதே போல் தேஷ்பாண்டே உள்ளூர் போட்டிகளில் புதிய பந்தில் வீசிய அனுபவமில்லாத நிலையில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு ஆரம்ப கட்ட ஓவர்களை கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் மகத்தான கேப்டனாக போற்றப்படும் தோனி இது போன்ற கேப்டன்ஷிப் குளறுபடிகளை செய்தது தமக்கு எதிர்பாரா ஒன்றாக அமைந்ததாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனி மிடில் ஓவர்களில் ஏதோ ஒரு இடத்தில் மொய்ன் அலியை பயன்படுத்தியிருந்தால் அதிக ரன்களை வாரி வழங்கிய துஷார் தேஷ்பாண்டேவை அணிக்குள் கொண்டு வர வேண்டிய தேவை வந்திருக்காது. எம்எஸ் தோனி போன்ற ஒருவர் இது போன்ற தவறுகளை அடிக்கடி செய்வார் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த இடத்தில் தான் நீங்கள் வலது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆஃப் ஸபின்னரை பயன்படுத்தி ரிஸ்க் எடுத்து அதற்கான பரிசை வெல்லும் சூழலை உருவாக்க வேண்டும்”

Sehwag

“அதே போல் சப்ஸ்டியூட் வீரராக வந்த துஷார் டேஷ்பாண்டேவிடம் புதிய பந்தை சென்னை கொடுத்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அவர் போட்டியின் கடைசி நேரங்களில் தான் பந்து வீசுவார். எனவே அந்த இடத்தில் அவருக்கு பதிலாக சென்னை ராஜ்வர்தன் ஹங்கர்கேகரிடம் புதிய பந்தை கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்” என கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : அடுத்தடுத்த 147 கி.மீ மிரட்டல் வேகத்தில் டெல்லியை தெறிக்க விட்ட மார்க் வுட் – லக்னோ அதிரடியாக வென்றது எப்படி

அது போக சிவம் துபேவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனவும் அதற்கடுத்தபடியாக 14* ரன்கள் குவித்த தோனி முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏப்ரல் 3ஆம் தேதியன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் லக்னோவுக்கு எதிரான தன்னுடைய 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் சென்னை தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement