ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் தமிழக வீரர் நடராஜன், ரிங்கு சிங் போன்ற சில திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் இம்முறையும் இந்தியா நாக் அவுட் சுற்றைத் தாண்டாது என்று பல ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
ஏனெனில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இத்தனைக்கும் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடும் இந்தியா அழுத்தமான நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.
சேவாக் கருத்து:
இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா பயமின்றி விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் அதை யாருமே செய்யவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த உலகக்கோப்பை ஃபைனலை நான் திரும்பி பார்த்தால் அதில் 11 முதல் 40 ஓவர்கள் வரை யாருமே பயமின்றி விளையாடவில்லை”
“நாம் அங்கே ஓரிரு பவுண்டரிகள் மட்டுமே அடித்தோம். இதற்கு நான் எடுத்துக்காட்டை தருகிறேன். 2007 – 08 முதல் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் நானும் இருந்தேன். அப்போதெல்லாம் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியாகவும் செமி ஃபைனலாகவும் கருதி விளையாடுவோம். அதனாலேயே நாங்கள் அந்த காலகட்டங்களில் நிறைய தொடர்களை வென்று உலகக் கோப்பைக்கு தயாரானோம்”
“எனவே தற்போதைய இந்திய அணியும் தோற்றால் வெளியேறி விடுவோம் என்று கருதி ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியாக நினைத்து விளையாட வேண்டும். தற்போதைய இந்திய அணிக்கு அந்த மனநிலை தான் தேவைப்படுகிறது. நாக் அவுட் போட்டிக்கு நீங்கள் செல்லும் போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பயமின்றி தைரியத்துடன் விளையாட வேண்டும். அந்த ஆட்டத்திற்கு தான் தற்போதைய இந்திய அணியில் பஞ்சமாக இருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் எல்லாரும் சூப்பர்ஸ்டாரா இருக்காங்கன்னு.. அதை செய்ய மறந்துடாதீங்க.. ட்ராவிட்டை எச்சரித்த லாரா
அவர் கூறுவது போல 2023 உலகக் கோப்பை ஃபைனலில் பவர் பிளே ஓவர்களின் கேப்டன் ரோகத் சர்மா அடித்து நொறுக்கி பயமின்றி விளையாடினார். ஆனால் மிடில் ஓவர்களில் விராட் கோலி, ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகவும் தடவலாக விளையாடினர். அதனால் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா சொந்த மண்ணில் பரிதாப தோல்வியை சந்தித்தது.