IPL 2023 : அணி நிர்வாகத்தை குறை சொல்லாதீங்க, நீங்க சண்டை போடாம இப்டி நடக்குமா? இளம் இந்திய வீரரை விளாசிய சேவாக்

sehwag
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு 13 போட்டிகளில் 9 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அதை விட அந்த அணியில் உம்ரான் மாலிக் 7 போட்டிகளுடன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021இல் அறிமுகமாகி ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு பெற்று மிரட்டலான வேகத்தில் பந்து வீசிய அவர் 2022 சீசனில் மீண்டும் தக்க வைக்கப்பட்டு 22 விக்கெட்டுகளை எடுத்து ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து இந்தியாவுக்காகவும் அறிமுகமானார்.

Umran Malik Pace

- Advertisement -

இருப்பினும் வேகத்தை மட்டுமே நம்பி ரன்களை வாரி வழங்கியதால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்குச் சென்று சில யுக்திகளை கற்று நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி பந்து வீசியதால் சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்து சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேக பந்தை வீசிய இந்தியராக சாதனை படைத்தார். அதனால் நல்ல பயிற்சியும் ஆதரவு கொடுத்தால் அசத்துவேன் என்று நிரூபித்த அவர் இந்த தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

சேவாக் விமர்சனம்:
ஆனால் டேல் ஸ்டைன் போன்ற ஜாம்பவானை பயிற்சியாளராக வைத்துக் கொண்டு உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் நிர்வாகம் சரியாக பயன்படுத்த தவறியதாக இர்பான் பதான், ஜாகிர் கான் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த நிலையில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் துருப்புச்சீட்டு வீரராக இருந்தும் 11 பேர் அணியில் விளையாடாதது ஏன் என்றும் அணி நிர்வாகத்தின் பின்புலத்தில் என்ன நடக்கிறது என்றும் தமக்கு தெரியவில்லை என கேப்டன் மார்க்ரம் கூறியது பெரிய சர்ச்சையாக மாறியது.

Umran Malik

இந்நிலையில் 2021 சீசனில் சுமாராக செயல்பட்ட டேவிட் வார்னரை கழற்றி விட்டதற்கு அவர் ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் சண்டை போட்டது ஒரு காரணமென அப்போதே செய்திகள் வெளி வந்தன. அந்த வகையில் இந்த சீசனில் சுமாராக செயல்பட்ட உம்ரான் மாலிக் ஹைதராபாத் நிர்வாகத்துடன் ஏதோ ஒரு சூழ்நிலையில் சண்டை போட்ட காரணத்தாலே பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நீங்கள் சுமாராக செயல்படும் போது சண்டை போடுவதை விட்டுவிட்டு அடுத்த வருடம் சிறப்பாக செயல்பட்டு செயலால் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று உம்ரான் மாலிக்கை விமர்சிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “உங்களது சொந்த வாழ்க்கையில் மட்டுமே பின்புலத்தில் எதையாவது செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். அதாவது களத்தில் விளையாடும் நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பது முக்கியமாகும்”

Sehwag

“குறிப்பாக நான் பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக இருக்கும் போது களத்தில் உங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். களத்திற்கு வெளியே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்களுடைய சொந்த வாழ்க்கை. இந்த விஷயத்தில் “பின்புலத்தில் நடப்பது எனக்கு தெரியாது” என மார்க்கம் சொன்னதை உண்மையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவெனில் அணி நிர்வாகத்துடன் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக உம்ரான் மாலிக் சண்டை போட்டிருக்கலாம் என்பதாகும்”

இதையும் படிங்க:வீடியோ : கோலி கோலி என கூச்சலிட்ட ரசிகர்களை மிரட்டிய நவீன் – 110மீ மெகா சிக்ஸரால் அடித்து நொறுக்கிய ரிங்கு சிங்

“அப்படியானால் அது தவறானது. ஏனெனில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பில் சிறப்பாக செயல்படாத நீங்கள் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அப்போது உங்களுடைய சிறந்த செயல்பாடுகளால் அனைவரின் வாயை மூட வேண்டும். கிட்டத்தட்ட இதே மாதிரியான செய்திகளும் காரணங்களும் தான் வார்னர் விஷயத்தில் சொல்லப்பட்டன. இந்த விஷயத்தை மார்க்கம் மறைமுகமான வகையில் இப்படி கூறியுள்ளார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement