
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சுப்மன் கில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர் எப்போதுமே தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. இருப்பினும் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையில் உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். எனவே 2025 ஐபிஎல் தொடரில் குஜராத்தை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற சுப்மன் கில் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் அப்படி பார்த்தால் பஞ்சாப் அணியை 11 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயரே கேப்டனாக நியமித்திருக்கலாமே என்று ஜாம்பவான் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தேர்ந்தெடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு பயத்தை கொடுத்திருக்கலாம் என்றும் சேவாக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளுக்காக போதுமான பாராட்டுக்களைப் பெறுவதில்லை. ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் தடுமாறியதாலேயே இந்தியாவின் கேப்டன்ஷிப் பதவியை பெறவில்லை என்று மனோஜ் திவாரி சொன்னார். அப்படி பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஐபிஎல் அற்புதமாக அமைந்துள்ளது”
“கேப்டனாகவும் இருக்கும் அவரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது? கண்டிப்பாக அவரால் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியும். ஒருவர் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவரை வெளிநாட்டு தொடருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் ஃபார்ம் காரணமாக அவர் சிறப்பாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க: டெல்லியிடம் தோற்க இதான்.. பிரீமியர் லீக்கை விட மிகப்பெரிய ஐபிஎல்’லில் கம்பேக் கொடுப்போம்.. ஸ்ரேயாஸ் பேட்டி
“அந்த வகையில் அவரை நான் டெஸ்ட் அணியில் பார்க்க விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் இதே அணுகுமுறையுடன் விளையாடினால் அது இந்திய அணிக்கு சாதகத்தைக் கொடுக்கும். அவரைப் போல் 2 – 3 வீரர்கள் இருந்தால் அது எதிரணிக்கு பயத்தைக் கொடுக்கும். இப்போதெல்லாம் இங்கிலாந்து ஓவருக்கு 6 – 7 ரன்ரேட் வீதத்தில் விளையாடுகிறது. அந்த சூழ்நிலையில் இந்தியா 4 – 5 ரன்ரேட் வீதத்தில் விளையாடினாலேயே எதிரணியை அழுத்தத்திற்குள் தள்ளலாம்” என்று கூறினார்.