
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 தோல்விகளுக்குப் பின் 3வது போட்டியில் வென்றது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இருப்பினும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை பெரிய ரன்கள் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அவர் இம்முறை இதுவரை 0, 8, 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அதைப் பயன்படுத்தி கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள அவர் பெரிய ரன்கள் குவிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக அணிக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தால் போதும் என்ற மனநிலையுடன் விளையாடுகிறார்.
இந்நிலையில் அதே மனநிலையுடன் ரோஹித் ஒரு பேட்ஸ்மேனாக மும்பை அணியிலும் விளையாடுவது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அதற்கு மாறாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த திறமைக் கொண்ட ரோகித் 10 ஓவர்கள் வரை விளையாடினால் ஆரஞ்சு தொப்பியை வெல்லும் அளவுக்கு அசத்துவார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ரோஹித் சர்மா ஆரஞ்சுக் தொப்பியை வென்ற ஒரு ஐபிஎல் தொடர் இருந்திருக்க வேண்டும். அந்தளவுக்கு சிறந்த வீரரான அவர் தொடர்ந்து ரன்கள் அடிப்பதில்லை. சமீபத்தில் இந்தியாவுக்காக விளையாடும் போது அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றியுள்ளது நல்லது. ஆனால் அவர் அதற்காக மிகவும் வேகமாக விளையாடுவதாக கருதுகிறேன்”
“ஒருவேளை களத்தில் நிலைத்து விளையாடினால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதை செய்யாத ரோஹித் சில நேரங்களில் வேகமாக விளையாடுகிறார். அதனால் நிறைய ரன்களை தவற விடுகிறார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஜஸ்பிரீத் பும்ரா ஐ.பி.எல் தொடரை முழுவதுமாக கூட தவறவிட வாய்ப்பு.. மும்பை அணிக்குள் விழுந்த இடி – வெளியான தகவல்
“ரோஹித் சர்மா ரன்களை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். அதே சமயம் இது என்னுடைய நாள் என்ற மனநிலையுடன் அவர் களத்திற்கு பேட்டிங் செய்ய வர வேண்டும். ஒருவேளை 15 – 10 ஓவர்கள் விளையாடினால் ரோஹித் சர்மாவால் எளிதாக 80 – 100 ரன்கள் அடிக்க முடியும். அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ரன்கள் அடிக்க வேண்டும்” என்று கூறினார்.