ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1992 போல பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 1992இல் ஆரம்பத்திலேயே இந்தியா போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அதற்காக மனம் தளராமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்துடன் போராடி இம்ரான் கான் தலைமையில் முதல் முறையாக கோப்பையை வென்று மாபெரும் சரித்திரம் படைத்தது.
அதே போலவே இம்முறை இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்க ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்து செமி பைனல் வாய்ப்பை 90% கோட்டை விட்டது. ஆனாலும் அதன் பின் வங்கதேசத்தை வீழ்த்திய அந்த அணி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மழையின் உதவியுடன் நியூசிலாந்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாராட்டிய சேவாக்:
குறிப்பாக நியூஸிலாந்து நிர்ணயித்த 402 என்ற கடினமான துரத்திய பாகிஸ்தானை டிஎல்எஸ் விதிமுறைப்படி வெற்றி பெற வைப்பதற்காக பேப்பரில் எழுதிக் கொடுத்த ரன்ரேட்டை பார்த்து அதிரடியாக விளையாடிய பகார் ஜமான் 63 பந்துகளில் சதமடித்து 126 ரன்கள் விளாசினார். அதனால் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்ட போது நியூசிலாந்தை விட 21 ரன்கள் முன்னிலை பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அதிர்ஷ்டத்துடன் வென்றது.
அந்த வகையில் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பகார் ஜாமான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2017 டிராபி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்து அவர் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு சமீப காலங்களில் சுமாரான ஃபார்மில் இருந்ததால் இத்தொடரில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காத பாகிஸ்தான் நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்து இமாம்-உல்-ஹக்கிற்கு வாய்ப்பை கொடுத்தது.
ஆனால் அந்த வாய்ப்புகளில் சுமாராக செயல்பட்ட இமாம்-உல்-ஹக் இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா போட்டியின் வரை பவர் பிளேவில் பாகிஸ்தான் ஒரு சிக்ஸர் அடிக்காமல் திணறியதற்கு புரோட்டின் உணவு அதிகமாக சாப்பிடாததே காரணம் என்று வேடிக்கையான சாக்கை சொன்னார். அந்த நிலையில் இப்போட்டியில் தனி ஆளாக 11 சிக்சர்களை நொறுக்கிய பகார் ஜமான் மொத்தமாக இத்தொடரில் 18 சிக்சர்கள் அடித்து ஒரு உலகககோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்து வெற்றியில் பங்காற்றியுள்ளார்.
இதையும் படிங்க: நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது.. அவர் தான் ரிட்டையராக காரணம்.. யுவி மனம் திறந்த பேட்டி
இந்நிலையில் அப்படிப்பட்ட தரமான வீரரை சரியாக பயன்படுத்தாமல் பெஞ்சில் அமர வைத்த உங்களுக்கு புரோட்டின் மட்டுமல்ல மூளையும் குறைவாக உள்ளதாக பாகிஸ்தானை சேவாக் ட்விட்டரில் கலாய்த்துள்ளது பின்வருமாறு. “பக்கார் ஜமானிடமிருந்து என்ன ஒரு இன்னிங்ஸ். இந்த தொடரின் சிறந்த பகுதிகளில் அவரை பெஞ்சில் அமர வைத்தது எந்த மூளை என்று கடவுளுக்கு தான் தெரியும். புரோட்டின் மட்டும் குறைவாக இல்லை. அதிரடியாக விளையாடும் எண்ணமும் குறைவாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.