IPL 2023 : இந்த சீசன்ல சொதப்பினால் உ.கோ சான்ஸ் அந்த தமிழக வீரருக்கு போய்டும் – குல்தீப், சஹாலை எச்சரிக்கும் சேவாக்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி கோப்பையை வெல்வதற்காக போராடி வருகின்றன. அதே போல இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக நிறைய வீரர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மீண்டும் மிகச்சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் டிஎன்பிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை 2020ஆம் ஆண்டு கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அந்த அணி நிர்வாகத்திடம் பேசி வாங்க வைத்தார்.

varun 1

- Advertisement -

அந்த சீசனில் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 6.84 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர் 2021 சீசனில் 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 6.58 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து கொல்கத்தா ஃபைனல் வரை செல்வதற்கு பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அந்த சமயங்களில் பேட்ஸ்மேன்கள் அடித்தால் கூட ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று அல்லது அருகில் சென்று வருண் சக்கரவர்த்திக்கு தமிழில் தினேஷ் கார்த்திக் ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட உதவியது யாராலும் மறக்க முடியாது.

சேவாக் பாராட்டு:
அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமாக ஓரிரு போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்த போதிலும் சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோர் ஃபார்மை இழந்ததால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் யாருமே எதிர்பாராத வகையில் வருண் சக்கரவர்த்தி நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைக்கு தினேஷ் கார்த்திக் இல்லாததால் உலக கோப்பையில் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுமாராக பந்து வீசிய அவர் அத்துடன் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

போதாக்குறைக்கு 2022 சீசனில் தினேஷ் கார்த்திக் பெங்களூருவுக்கு விளையாட சென்று விட்டதால் 8 கோடிக்கு கொல்கத்தா அணியில் தக்கவைக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி 6 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து மோசமாக செயல்பட்டதால் இறுதியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இருப்பினும் இந்த சீசனில் மீண்டும் நம்பி தக்க வைக்கப்பட்ட அவர் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 5 விக்கெட்களை 5.35 என்ற எக்கனாமியில் முன்பை விட முன்னேறிய செயல்பாடுகளுடன் பந்து வீசி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட 4 விக்கெட்களை எடுத்து அவர் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். மறுபுறம் ராஜஸ்தான் அணியில் 2 போட்டியில் 5 விக்கெட்களை எடுத்தாலும் அதை 8.37 என்ற சுமாரான எக்கனாமியில் சஹால் எடுத்து வரும் நிலையில் டெல்லி அணியில் குல்தீப் யாதவ் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கத் திண்டாடி வருகிறார். அப்படி இந்த சீசனில் அபாரமாக செயல்படும் வருண் சக்கரவர்த்தி இதே போல் அசத்தும் பட்சத்தில் மீண்டும் ஆச்சரியப்படும் வகையில் 2023 உலக கோப்பையில் தேர்வாக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் வீரவேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

Sehwag

எனவே உங்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமெனில் இந்த சீசனில் சிறப்பாக செயல்படுங்கள் என்று சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தியிடம் ஒரு முறையான மணிக்கட்டு ஸ்பின்னர் பந்து வெளியே எடுத்து செல்வது போன்ற நிலை இல்லை. மாறாக அவர் பெரும்பாலும் டாப் ஸ்பின் மற்றும் கூக்லிஸ் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறார்”

இதையும் படிங்க:CSK vs MI : மும்பை அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – தல தோனி மகிழ்ச்சி

“அதை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஒரு சில தருணங்களில் அடித்தாலும் பெரும்பாலும் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்த சீசனில் அவர் மிகச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் தேர்வாக வாய்ப்புள்ளது என்பதை யார் அறிவார்கள்” என்று கூறினார்.

Advertisement