அசாத்தியமான ஷாட்களை கூட அசால்ட்டாக அடிக்கிறாரு, அவர தவிர யாராலயும் அப்படி ஆட முடியாது – சேவாக் வியப்பு

Sehwag
Advertisement

உலகப் புகழ்பெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதியன்று இங்கிலாந்தை 2வது அரையிறுதியில் எதிர்கொள்ளும் இந்தியா 2014க்குப்பின் நாக் அவுட் போட்டிகளில் செய்த தவறுகளை செய்யாமல் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு செல்ல தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே அட்டகாசமான ஃபார்மில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

Suryakumar YAdav

அதிலும் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ள சூரியகுமார் யாதவ் இந்த டி20 உலக கோப்பையில் தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய பேட்ஸ்மேனாக அசத்தி வரும் அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 1000* ரன்களை குவித்த முதல் வீரராக உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சுழன்றடிக்கும் சூர்யா:
அதனால் கடந்த வாரம் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி மற்றுமொரு உலக சாதனை படைத்த அவர் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக ஜிம்பாப்பேவுக்கு எதிரான கடைசி போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தடுமாறிய போது 61* (25) ரன்களை 244.00 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரைட்டில் விளாசிய அவர் சூப்பர் பினிஷிங் கொடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

Suryakumar Yadav

அப்போட்டியில் ஒய்ட் போல் வந்த ஒரு பந்தை முன்னங்காலில் முன்னே வந்து அசால்டாக அவர் பறக்கவிட்ட சிக்ஸர் அனைவரையும் வாய் மேல் கை வைத்து பாராட்ட வைத்தது. அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய அதிரடி நாயகன் வீரேந்திர சேவாக் அசாத்தியமான ஷாட்டுகளை கூட சூரியகுமார் யாதவ் அசால்ட்டாக அடிப்பதாக வியந்து பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஒரு ஷாட்டை அடிக்க விரும்பும் போது அதற்கேற்றார் போல் பந்து வரவில்லை என்றாலும் கூட வேறு ஏதோ கோணத்தில் வரும் பந்தை தாம் அடிக்க விரும்பும் கோணத்திற்கு ஏற்றவாறு மாற்றி அடிக்கிறார். அவரால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் ஒய்ட் பந்தை விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் ஃபைன் லெக் திசையில் சிக்சராக அடிக்க முடிகிறது. என்னை பொறுத்த வரை அந்த மாதிரியான ஷாட்கள் அசாத்தியமானது. ஆனால் அதை சூரியகுமார் அடிப்பதால் சாத்தியமாகிறது. கவர் திசைக்கு மேல் அடிக்க விரும்பினால் அவர் சூரியகுமாராக இருப்பதால் அவரால் நிச்சயம் அதை சாத்தியமாக்க முடியும். அதே போல் பவுலருக்கு மேலே அடிக்க நினைத்தால் அவர் சூரியகுமார் என்பதால் அது சாத்தியமாகும்” என்று கூறினார்.

Sehwag

அதாவது சூரியகுமார் யாதவ் எங்கெல்லாம் அடிக்க விரும்புகிறாரோ அங்கெல்லாம் பந்து எப்படி வந்தாலும் தாம் நினைப்பது போல் அடித்து நினைத்துப் பார்க்க முடியாத ஷாட்டை உருவாக்கி சாத்தியமாக்குவதாக சேவாக் பாராட்டியுள்ளார். முன்னதாக சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்திலிருந்து வந்தவரைப் போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க : பவுலர்களுக்காக விமானத்தில் தங்களுக்கு கிடைத்த சலுகையை விட்டுக்கொடுத்த டிராவிட், ரோஹித், கோலி – சுவாரசிய தகவல்

அதே போல் விரைவில் தம்மையும் மிஞ்சிய 360 டிகிரி பேட்ஸ்மேனாக நீங்கள் வருவீர்கள் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement