சச்சின், கிறிஸ் கெயிலை முந்திய விராட் கோலி.. ஐசிசி தொடர்களின் புதிய ஹீரோவாக உலக சாதனை

Chris Gayle
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் 8 பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியுள்ளது. குறிப்பாக புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருப்பதால் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்காவை நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் தெறிக்கவிட்ட இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் குவித்து 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவினர். ஆனால் அதை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 83 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஐசிசி தொடர்களின் நாயகன்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (தலா 49) ஆல் டைம் உலக சாதனையை அசால்டாக சமன் செய்தார்.

அதை விட தன்னுடைய பிறந்தநாளில் இப்போட்டியில் விளையாடிய அவர் உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த வகையில் பேட்டிங்க்கு சவாலாகவே இருந்த கொல்கத்தா மைதானத்தில் நங்கூரமாக நின்று தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 10 பவுண்டரியுடன் 101* ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதையும் சேர்த்து 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி தொடர்களில் மொத்தம் விராட் கோலி 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 12*
2. கிறிஸ் கெயில் : 11
3. சச்சின் டெண்டுல்கர்/ரோஹித் சர்மா/ஷேன் வாட்சன்/மகிளா ஜெயவர்த்தனே : தலா 10
4. யுவராஜ் சிங்/ஏபி டீ வில்லியர்ஸ்/சனாத் ஜெயசூர்யா : தலா 9

இதையும் படிங்க: உண்மையாவே இது 326 ரன்ஸ் பிட்ச்சே கிடையாது.. எல்லா பாராட்டையும் அவங்களுக்கு கொடுங்க.. ஜடேஜா ஓப்பன்டாக்

அந்த வகையில் ஐசிசி தொடர்களின் புதிய நாயகனாக விராட் கோலி இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமை சேர்த்துள்ளார். இதைத்தொடர்ந்து 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை நவம்பர் 12ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement