
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2010இல் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது திறமையை அறிந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக களமிறக்கினார்.
அதைப் பயன்படுத்தி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்ற தவான் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்போதிலிருந்து ஐசிசி தொடர்களில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது பெற்றார். அத்துடன் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக பேட்டிங் சராசரியை (65.15) கொண்ட வீரராகவும் தவான் சாதனை படைத்தார்.
அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தவான் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அதன் பின் தடுமாற்றமாக விளையாடிய அவரை கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. எனவே தற்போது 38 வயதாகும் அவர் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில் தம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த ஷிகர் தவானுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஷிகர் தவான், அறிமுக போட்டியில் பயமின்றி விளையாடியது முதல் இந்தியாவின் துடுப்பாட்ட துவக்க வீரராக செயல்பட்டது வரை நீங்கள் எங்களுக்கு எண்ணற்ற நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்”
“இந்த விளையாட்டின் மீதான உங்களுடைய ஆர்வம், உங்களுடைய நேர்மைத்தன்மை, உங்களுடைய சிரிப்பு ஆகியவற்றை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் உங்களுடைய மரபு எப்போதும் வாழும். எப்போதும் இதயத்திலிருந்து முன்னோக்கி வந்து மறக்க முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றிகள். களத்திற்கு வெளியே உங்களுடைய அடுத்த இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள் கப்பர்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல் போட்டியில் அசத்தினாலும், இரண்டாவது போட்டியில் சொதப்பிய இஷான் கிஷன் – டீமுக்கு திரும்புவது கஷ்டம்
முன்னதாக விராட் கோலி – ஷிகர் தவான் ஆகியோர் சேர்ந்து விளையாடி இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி அவருடன் சேர்ந்து 5 வருடங்களில் 100 சதங்கள் அடித்ததை மறக்க முடியாது என்று சிக்கர் தவான் தனது ஓய்வு குறிப்பில் தெரிவித்திருந்தார். தற்போது ரோஹித், விராட், தவான் ஆகியோர் ஒன்றாக விளையாடிய சகாப்தம் நிறைவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.