இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 27 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு தொடரிலுமே அவர் இடம்பெற்று வந்தார்.
தொடர்ந்து சொதப்பும் இஷான் கிஷன் :
ஆனால் அணியில் இடம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டதால் இஷான் கிஷனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட தொடரின் போது பாதியிலேயே இந்திய அணியில் இருந்து வெளியேறி சொந்த ஊரில் ஓய்வு எடுத்து வந்தார்.
பின்னர் இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்ப வேண்டும் எனில் ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் பி.சி.சி.ஐ-யின் அந்த வேண்டுகோளையும் மீறி அவர் ஐபிஎல் தொடருக்காக பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பிசிசிஐ அவர் மீது ஒழுங்கீன செயல்பாடு காரணமாக நடவடிக்கை எடுத்து அவரை பிசிசி-ஐயின் வருடாந்திர சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.
அதோடு எதிர் வந்த பல்வேறு தொடர்களிலும் அவரது பெயர் பரிசீலிக்கப்படாமல் அவர் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவர் இந்திய அணிக்கு திருப்ப வேண்டுமெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் புஜ்ஜி பாபு தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து இருந்தாலும், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் ஷாகிப் அல் ஹசன்.. அதிகரித்த சிக்கல் – என்ன நடந்தது?
மீண்டும் அவர் இந்திய அணிக்கு திரும்ப வேண்டுமெனில் இந்த புஜ்ஜி பாபு தொடரிலும், துலீப் டிராபி தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். ஒருவேளை அவர் இந்த 2 தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்புவது கடினம் தான்.



