
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் சென்றடைந்துள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இந்திய அணி தயாராகி வருகிறது. மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வந்த விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இரண்டு மாபெரும் சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் படைக்க இருக்கும் சாதனைகளாவது : தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 285 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 13963 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக மேலும் 37 ரன்கள் அடித்தால் 14000 ரன்களை விரைவில் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்துவார்.
சச்சின் தனது 350-வது ஒருநாள் போட்டியில் தான் 14,000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருக்கிறார் ஆனால் தற்போது சச்சினை விட 65 இன்னிங்ஸ் முன்கூட்டியே உள்ள கோலி அடுத்த போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று கோலி நிகத்தயிருக்கும் இரண்டாவது சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : இந்திய அணியில் அந்த பலவீனம் இருக்கு.. டாஸ் ஜெய்ச்சா இந்த தப்பை செஞ்சுடாதீங்க.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக ஷிகர் தவான் முதலிடத்தில் உள்ளார். 10 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 701 ரன்களை குவித்துள்ள வேளையில் விராட் கோலி 13 போட்டியில் விளையாடி 523 ரன்களை எடுத்துள்ளார். எதிர்வரும் இந்த தொடரில் 123 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தவானையும் அவர் மிஞ்சுவார் என்பது குறிப்பிடத்தக்கது.