நான்கரை ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல், சோகத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் – என்ன நடந்தது?

kohli
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொஹாலியில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஏற்கனவே 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து இந்த தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் மார்ச் 12-ஆம் தேதியன்று துவங்கியது. பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

pant

- Advertisement -

ஏமாற்றிய விராட் கோலி:
இதை அடுத்து தனது பேட்டிங்கை துவங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 15, மயங்க் அகர்வால் 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹனுமா விஹாரி 32 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி வழக்கம் போல மிகச் சிறப்பாக தொடங்கிய போதிலும் 23 ரன்களில் அவுட்டானதால் பெங்களூரு ரசிகர்கள் மிகமிக ஏமாற்றம் அடைந்தார்கள்.

ஏனெனில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் விளையாடி வரும் அவருக்கு பெங்களூருவில் ரசிகர்கள் பட்டாளம் லட்சக்கணக்கில் உள்ளது என்றே கூறலாம். இதனால் அவர் விளையாடும் போட்டியை பார்ப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை வாங்கிய பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியில் அவர் களமிறங்கிய போது பலத்த கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால் மீண்டும் சதம் அடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானதால் பெங்களூரு ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

kohli 1

வலுவான நிலையில் இந்தியா:
இதனால் 86/4 என தடுமாறிய இந்தியாவை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மீட்டெடுத்தார். தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவரின் அதிரடியான ஆட்டத்தால் இதர இந்திய வீரர்கள் சொதப்பிய போதிலும் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களை எடுத்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் போட்டியைப் போலவே மீண்டும் படுமோசமாக செயல்பட்டு இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்திவ்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்கள் சாய்த்தார்.

Bumrah 1

சரிந்த கிங் கோலி:
இதை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய போது மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும் பொறுப்பாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய ஹனுமா விஹாரி 35 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலி மீண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெறும் 13 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் அவரின் 71-வது சதத்தை தேடிய பயணம் மீண்டும் தொடர்கிறது.

- Advertisement -

ஆனால் அதைவிட இந்த போட்டியில் பெரிய ரன்களை குவிக்க தவறியதால் நான்கரை ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அவரின் பேட்டிங் சராசரி 50க்கும் கீழே வந்துள்ளது. ஆம் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 50க்கும் குறைவான பேட்டிங் சராசரியை தொட்ட அவர் அதன்பின் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி வைத்திருந்தார். ஆனால் சமீப காலங்களாக பெரிய ரன்களை அடிக்க முடியாமல் சொதப்பி வரும் அவர் தற்போது 1683 நாட்களுக்கு பின் முதல் முறையாக 50க்கும் கீழ் சரிந்துள்ளார். அவரின் தற்போதைய பேட்டிங் சராசரி 101 போட்டிகளில் 49.96 ஆகும்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி டீம் எடுத்த இந்த முடிவு சூப்பரான ஒன்னு. இதுதான் கரெக்ட் – சுனில் கவாஸ்கர் கருத்து

இதன் வாயிலாக உலகிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே பேட்ஸ்மேன் என்ற மகத்தான பெருமையையும் அவர் இழந்துள்ளார். ஆம் ஒருநாள் கிரிக்கெட்டில் 58.1, டி20 கிரிக்கெட்டில் 51.5 பேட்டிங் சராசரி வைத்துள்ள அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் கீழ் வந்துள்ளதால் கடந்த பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அந்த மகத்தான பெருமையை இழந்துள்ளார். ஏற்கனவே கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் தற்போது நான்கரை வருடங்களுக்குப் பின் பேட்டிங் சராசரியில் இப்படி சரிந்துள்ளது விராட் கோலியின் ரசிகர்களை மிகவும் சோகமடைய வைத்துள்ளது.

Advertisement