CWC 2023 : 2019இல் ஸ்மித் 2023இல் நவீன்.. தங்கமான குணத்தால் மனதளவிலும் கிங்’காக திகழும் விராட் கோலி

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் ஆப்கானிஸ்தானை 8 வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதமடித்து 131 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அவருடன் இஷான் கிசான் 47, விராட் கோலி 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் எடுத்ததால் 35 ஓவர்களிலேயே வென்ற இந்தியா ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 2வது இடத்திற்கு சென்றது. அதை விட அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்திய ஜாம்பவான் விராட் கோலி ஆகியோர் இணைந்த கைகளாக ஒன்று சேர்ந்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

மனதளவிலும் கிங்:
அதாவது கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே சண்டை ஏற்பட்டது. இறுதியாக கௌதம் கம்பீரும் உள்ளே புகுந்து விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக மாறியது. அத்துடன் மாம்பழங்களை வைத்து விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீன் கலாய்த்ததால் ரசிகர்கள் அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம் கோலி கோலி என்று கூச்சலிட்டு அது பதிலடி கொடுத்து வந்தனர்.

அந்த வரிசையில் இப்போட்டியிலும் அவர் பேட்டிங் செய்ய வந்த போது கோலியின் சொந்த ஊரான டெல்லி கோட்டையில் ரசிகர்கள் அதே போல கூச்சலிட்டு பதிலடி கொடுத்தனர். அத்துடன் விராட் கோலி பேட்டிங் செய்த போது பந்து வீசுவதற்காக வந்த நவீனுக்கு எதிராக மீண்டும் ரசிகர்கள் இருமடங்கு வேகமாக கூச்சலிட்டு பதிலடி கொடுத்தார்கள். ஆனால் அப்போது இனிமேலும் கிண்டலடிக்க வேண்டாம் என்று கையசைத்த விராட் கோலி ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

- Advertisement -

அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று கை கொடுத்ததை ஏற்றுக் கொண்ட விராட் கோலி அவருடைய தோளில் தட்டி கொடுத்ததால் அனைத்தும் நட்பாக மாறியது. முன்னதாக பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தடை பெற்ற ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அதிலிருந்து வந்து 2019 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது இதே போல இந்திய ரசிகர்கள் சீட்டர் சீட்டர் என்று முழங்கி கிண்டலடித்தார்கள்.

இதையும் படிங்க: CWC 2023 : லெஜெண்ட்ஸ் சச்சின், பாண்டிங், சேவாக், பிளமிங்கை முந்திய ரோஹித் – 6 புதிய சாதனைகளின் லிஸ்ட் இதோ

அப்போது கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு ஸ்மித்தை கைதட்டி பாராட்டுமாறு இந்திய ரசிகர்களை விராட் கோலி கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார். அதற்கு ஸ்மித் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்து அப்போதிலிருந்து விராட் கோலியின் நண்பராக மாறிவிட்டார். அத்துடன் அதற்கு “ஸ்பிரிட் ஆஃப் தி இயர்” என்ற விருதை வழங்கி விராட் கோலியை ஐசிசி கௌரவித்ததை மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போது தன்னை சீண்டிய ஆப்கானிஸ்தான் வீரரை கிண்டலடிக்க வேண்டாம் என்று சொன்ன விராட் கோலி செயலில் மட்டுமல்லாமல் “மன்னித்து அன்பை விதைப்போம்” என்ற குணத்தால் எதிரியை நண்பனாக்கி மனதளவிலும் கிங்’காக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement