என்னா மனசுயா, பாகிஸ்தான் ரசிகர்களுக்காக விராட் கோலி செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்

IND PAK Fans
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரின் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பை விட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 33 வயதிலேயே 23000+ ரன்களையும் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.

மேலும் 2017 முதல் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த அவர் அந்த அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை 2019க்குப்பின் 71வது சதத்தை அடிக்க விடாமல் அவரின் அற்புதமான கேரியரில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அரைசதம் கூட அடிக்காததால் பொறுமையிழந்த விமர்சகர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

விமர்சனத்தை நொறுக்குவாரா:
இருப்பினும் அவரை விமர்சிக்கும் பல முன்னாள் வீரர்கள் 70 சதங்களை தங்களது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா, கெவின் பீட்டர்சன் போன்ற நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அப்படி தனக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து நல்ல புத்துணர்ச்சியை பெற்றுள்ள விராட் கோலி இந்த ஆசிய கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னைச் சாம்பியன் வீரர் என நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக துபாயில் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர்களாக பறக்கவிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு சூப்பர் ஸ்டார் வீரராகக் கருதப்படும் அவர் பயிற்சி எடுக்க செல்லும் போதும் வரும்போதும் நிறைய ரசிகர்கள் அவரை பார்த்து புகைப்படம் எடுப்பதற்காக போட்டி போட்டு வருகிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் ரசிகர்கள்:
வரலாற்றில் பல முறை பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள விராட் கோலிக்கு அந்நாட்டில் இந்தியாவுக்கு நிகராக ரசிகர்கள் உள்ளதை நாம் அறிவோம். அந்த நிலைமையில் துபாயில் பயிற்சி எடுத்து வரும் அவரை பார்க்க பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரமான ரசிகர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே துபாய் மைதானத்தை வந்தடைந்துள்ளார்.

அவரைப் பார்ப்பதற்கு தினம்தோறும் முயற்சி செய்து வரும் முகமத் ஜிப்ரான் எனும் பெயருடைய அந்த ரசிகர் நேற்று விராட் கோலியை நேரில் பார்த்தாலும் அவரது அருகில் செல்ல விடாமல் மைதான பாதுகாவலர் தடுத்தனர். அதை பார்த்த விராட் கோலி பாதுகாவலரிடம் அவரை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு அவரை தனது அருகே வரவழைத்து அவரின் கோரிக்கையை ஏற்று செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியை தவிர்த்து நான் யாருடைய ரசிகரும் கிடையாது. அவரை சந்திப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து ஒரு மாதம் முன்பாகவே வந்து இங்கு காத்திருக்கிறேன். தற்போது பயிற்சியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பிய போது அவரை சந்திக்க நான் முயற்சித்தேன். அவர் கிரிக்கெட்டர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்பதால் என்னுடைய கோரிக்கையை ஏற்று செல்பி எடுத்துக் கொண்டார்” என கூறினார்.

அதைவிட பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி ரசிகை தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதை அறிந்த விராட் கோலி அவருக்கு அருகே சென்று குனிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த தருணம் தனது வாழ்நாளில் மறக்கவே முடியாதது என்று அந்த ரசிகை தெரிவிப்பது பார்ப்போரின் நெஞ்சங்களை தொடுகிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா நிச்சயம் தோற்கடிக்கும் என சொல்வதற்கான 4 முக்கியமான காரணங்கள்

இப்படி எதிரணி என்பதையும் தாண்டி தன் மீது பாசம் வைத்துள்ள பாகிஸ்தான் ரசிகர்களுடன் விராட் கோலி முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப் போட்டு கொடுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisement