ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராவதற்கு உதவும் வகையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதில் தற்சமயத்தில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் ஏற்கனவே தங்களுடைய முதல் போட்டியில் நேபாளை அடித்த நொறுக்கியதை போல இப்போட்டியிலும் பரம எதிரி இந்தியாவையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
அதற்கு சவாலை கொடுத்து இந்தியா இத்தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்வதற்காக போராட தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் மிகவும் பலமான அணியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹரிஷ் ரவூப் மற்றும் புதிய பந்தில் தாறுமாறாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் ஷாஹின் அப்ரிடி ஆகியோர் ரோஹித் சர்மா, சுப்மன் கில் போன்றவருக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குருவை மிஞ்சுவாரா:
ஆனாலும் இதே பவுர்களை கடந்த 2022 டி20 உலக கோப்பையில் மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்த விராட் கோலி இம்முறையும் இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 19 வருட உலக சாதனையை உடைத்து விராட் கோலி புதிய சாதனை படைப்பார்.
லிட்டில் மாஸ்டர் என்று கொண்டாடப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2004ஆம் ஆண்டு இதே பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் தம்முடைய 321வது ஒருநாள் இன்னிங்ஸில் 13000 ரன்களை கடந்து அந்த உலக சாதனையை படைத்துள்ளார். மறுபுறம் சச்சினை தம்முடைய குருவாக கொண்டு கடந்த 2008 முதல் ஒரு நாள் போட்டிகளில் அசத்தி வரும் விராட் கோலி இதுவரை 265 இன்னிங்ஸ்களில் 12898 ரன்களை 57.32 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார்.
சொல்லப்போனால் ஏற்கனவே தம்முடைய குருவான சச்சினை மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்துள்ள அவர் இந்த சாதனையை மிகவும் எளிதாக உடைப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அதை உடைப்பதற்கு இன்னும் அவருக்கு 55 இன்னிங்ஸ்கள் போதுமானதாக இருப்பதால் 100% இந்த உலக சாதனை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: IND vs PAK : அப்பாடா ஒருவழியா நல்ல நியூஸ் வந்தாச்சி. இன்றைய போட்டி குறித்து வெளியான – முக்கிய அப்டேட்
மேலும் 2012 ஆசிய கோப்பை, 2015 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எப்போதுமே பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துள்ள அவர் இப்போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் போட்டி நடைபெறும் பல்லக்கேல் நகரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வருண பகவான் வழிபடும் பட்சத்தில் அவர் இந்த சாதனையை உடைத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று நம்பலாம்.