இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விலகிய விராட் கோலி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம் காரணம் என்ன?

Virat Kohli 3
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மறுபுறம் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா கடந்த 12 வருடங்களாக டெஸ்ட் தொடரில் தோற்காமல் அசத்தி வருகிறது.

அந்த வரிசையில் இம்முறை இங்கிலாந்தையும் தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

- Advertisement -

விலகிய விராட் கோலி:
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இருந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் தமக்கு விடுப்பு கொடுக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதை ஏற்று கொண்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு ஆகியோரிடம் அது பற்றிய விவரத்தை விராட் கோலி தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. அதே சமயம் முதலிரண்டு போட்டியில் தாம் விளையாடாவிட்டாலும் முழுமையான ஆதரவு கொடுப்பேன் என்று பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விராட் கோலி இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி காணும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியின் முடிவுக்கு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மதிப்பு கொடுத்து அவருடைய சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விராட் கோலிக்கு பதிலான மாற்று வீரர் பற்றி விரைவில் தேர்வுக் குழுவினர் அறிவிப்பார்கள் என்றும் பிசிசிஐ ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சச்சின், கவாஸ்கர், டிராவிட் ஆகியோரை தொடர்ந்து 4 ஆவது இந்திய வீரராக விராட் கோலி – படைக்கவுள்ள சாதனை

அந்த வகையில் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விராட் கோலி கடைசி நேரத்தில் விலகியுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. மேலும் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் விலகுவது இந்திய அணிக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கடைசி 3 போட்டிகளிலாவது அவர் விளையாடுவாரா என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement