கஷ்ட காலத்தில் ஆதரவு கொடுத்து பார்முக்கு திரும்ப உதவியது அவர் மட்டுமே – விராட் கோலி நெகிழ்ச்சி

Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அதிரடியான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடைபெற்று முடிந்துள்ள சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தத் தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா குரூப்-2 பிரிவில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து முதலிடம் பிடித்துள்ளது. அதனால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிகபட்சமாக 246* ரன்களை குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதே உலக கோப்பையிலிருந்து அவரை அதிரடியாக நீக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இந்தியாவைச் சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். ஏனெனில் கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி பகலானால் இரவு வரும் என்ற இயற்கை நியதிக்கேற்ப 2019க்கு பின் சதமடிக்க முடியாமல் தவித்தார்.

- Advertisement -

தோனி மட்டுமே:
அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்த அவர் அவ்வப்போது 40, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்த போதிலும் அதை கண்டுகொள்ளாத அனைவரும் பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற முத்திரையை குத்தி கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் சளைக்காமல் கடுமையாக உழைத்து வந்த அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து இந்த உலகக் கோப்பையிலும் அதே புத்துணர்ச்சியுடன் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த போது அவரை விமர்சித்த அதே வாய்கள் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று மீண்டும் பாராட்டின.

முன்னதாக சதமடிக்க முடியாமல் தவித்த காலங்களில் அணியிலிருந்து நீக்குமாறு சொல்லி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியவர்களுக்கு மத்தியில் தம்மை வளர்த்த முன்னாள் கேப்டன் தோனி மட்டுமே உண்மையான அன்புடன் தமக்கு ஆதரவு கொடுத்ததாக சமீபத்திய ஆசியக் கோப்பையின் போதே விராட் கோலி தெரிவித்திருந்தார். அதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்த போது தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் அனுப்பியதாக அவர் தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது. இந்நிலையில் அன்றைய நாளில் தோனி தமக்கு என்ன செய்தி அனுப்பினார் என்பதை தற்போது மனம் திறந்து விராட் கோலி கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னை உண்மையாக அணுகிய ஒரே நம்பர் எம்எஸ் தோனி மட்டுமே. என்னைப் பொருத்த வரையில் என்னை விட மூத்தவரான அவரிடம் இவ்வளவு வலுவான பிணைப்பு மற்றும் வலுவான உறவை பெற முடியும் என்பதை அறிவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாகும். இது பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்த நட்பு. அந்த செய்தியில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால் “நீங்கள் வலிமையானவராகவும் வலிமையான நபராகவும் பார்க்கப்படும்போது, ​​நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மக்கள் மறந்துவிடுவார்கள்”. எனவே அது என்னுடைய மனதை தாக்கியது”

“அதனால் எப்போதும் நான் தன்னம்பிக்கை உள்ளவனாக மிகவும் மனவலிமை உள்ளவனாக எந்த சூழ்நிலையையும் சகித்துக் கொண்டு எனக்கு வழி காட்டக் கூடியவனாக இருக்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் நீங்கள் 2 படிகள் பின்வாங்கினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து நீங்கள் எப்படி செயல்பட போகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : வேற்று கிராகவாசி மாதிரி அடிக்கிறாரு, அவர அவுட் செய்தது ரொம்ப கஷ்டம் – வாசிம் அக்ரம் புகழாரம்

அதாவது தோனியின் ஆதரவும் நம்பிக்கை வார்த்தைகளும் கடினமான நேரங்களிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பாதையில் நடக்க உதவியதாக விராட் கோலி மனதார பேசியுள்ளார்.

Advertisement