ஆசிய கோப்பை 2023 : மிகவும் கடினமான யோ-யோ டெஸ்டில் தனது ஸ்கோரை பகிர்ந்த ஃபிட்னெஸ் கிங் விராட் கோலி – எவ்வளவு தெரியுமா?

Virat Kohli YOYO
- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் துவங்குகிறது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயத்தை சந்தித்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இருப்பினும் இன்னும் முழுமையாக ஃபிட்டாகாமல் கடந்த 3 மாதங்களுக்கு மேல் எவ்விதமான முதன்மையான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் அவர்களை ஆசிய கோப்பையில் தேர்வு செய்துள்ளது நிறைய விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த நிலைமையில் இலங்கையில் நடைபெறும் தங்களுடைய ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் ஃபிட்னெஸ் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

யோயோ டெஸ்ட் ஸ்கோர்:
குறிப்பாக சமீப காலங்களாகவே ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் அடிக்கடி காயத்தை சந்தித்து வெளியேறியதால் மீண்டும் இந்திய அணியில் யோயோ டெஸ்ட் கொண்டு வரப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது. வேகமாக ஓடுவது, பளுவை தூக்குவது போன்ற பல்வேறு விதமான சோதனைகளை கொண்ட யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன் என்ன தான் நல்ல ஃபார்மில் இருந்து திறமையை கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கு விளையாட தேர்வாக வேண்டுமெனில் அந்த டெஸ்டில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட யோ யோ டெஸ்டில் நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி இன்று கலந்து கொண்டு தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்துள்ளார். அந்த தேர்வில் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்த விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. ” பயமுறுத்தும் சங்குகளுக்கு இடையே யோ யோ சோதனையை முடித்த மகிழ்ச்சி. 17.2 முடிந்தது” என்று கூறியுள்ளார். குறிப்பாக பிசிசிஐ விதிமுறைகளின் படி 16.5 என்பது யோ யோ தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணாக இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் 16.5 என்பதை தாண்டி எக்ஸ்ட்ரா மதிப்பெண்களையும் எடுத்துள்ள அவர் அதில் தேர்வான மகிழ்ச்சியுடன் களத்தில் படுத்த வாக்கில் எடுத்த கூலான புகைப்படத்தை பதிவிட்டு தம்முடைய யோயோ ஸ்கோரை பகிர்ந்துள்ளார். ஆரம்ப காலங்களில் சற்று உடல் பருமனாக இருந்தாலும் நீண்ட காலம் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு திறமையுடன் நல்ல ஃபிட்னஸ் அவசியம் என்பதை உணர்ந்த அவர் நாளடைவில் கடினமான பயிற்சிகளை எடுத்து மிகவும் ஃபிட்டான வீரராக மாறினார்.

மேலும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் முழுமையான உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமையும் ஏற்படுத்திய அவரது தலைமையிலான இந்திய அணியில் காயங்களும் குறைவாகவே இருந்தது. அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதற்கு அவசியமாக பார்க்கப்படும் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு உலக அளவில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் அவர் இந்த யோயோ டெஸ்டில் எளிதாக தேர்ச்சி பெற்றதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:2023 உ.கோ : கடைசி நேரத்தில் அப்டி நடந்தா என்ன பண்ணுவீங்க? இந்தியாவில் திறமைக்கா பஞ்சம் – தேர்வுக்குழுவை விமர்சித்த கபில் தேவ்

அதனால் அவரை பாராட்டும் ரசிகர்கள் இதே போல ரோகித் சர்மா போன்ற சுமாரான ஃபிட்னஸ் கடை பிடிக்கும் வீரர்கள் தங்களுடைய யோயோ டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியினர் செப்டம்பர் 2ஆம் தேதி தங்களுடைய முதல் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement