
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியின் போது சதம் அடித்து அசத்திய விராட் கோலி எஞ்சியிருந்த 4 போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இயல்பான ரன் குவிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதிலும் குறிப்பாக இந்த தொடர் முழுவதுமே ஒரே மாதிரியான ஷாட்டை விளையாடி விராட் கோலி ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படி மோசமான பேட்டிங் பார்மை விராட் கோலி வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் உள்ளூர் போட்டியில் விளையாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தது.
அதேபோன்று இந்திய அணியின் பயிற்சியாளரான கெளதம் கம்பீரும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தற்போது முன்னணி வீரர்கள் பலரும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலியும் டெல்லி அணியுடன் இணைந்து சௌராஷ்டிரா அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் ரஞ்சி போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர் தனக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி காரணமாக ஊசி செலுத்தியுள்ள கோலி அதன் காரணமாக ரஞ்சி தொடரில் இணையாமல் இருந்தார்.
ஆனால் தற்போது வெளியான தகவலின் படி : ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விராட் கோலி விளையாட இருக்கிறார். அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் டெல்லி மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : தமிழக அணியில் இணைந்து விளையாட இருக்கும் கேரள வீரர் சஞ்சு சாம்சன்.. காரணம் இதுதான் – விவரம் இதோ
அதனை தொடர்ந்து ரயில்வேஸ் அணிக்கெதிராக நடைபெற இருக்கும் இந்த போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி தொடரில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.