ரசிகர்கள் கோரிக்கையை லைவாக நிறைவேற்றிய ரோஹித்.. 7 வருடம் கழித்து மேஜிக் செய்த கிங் கோலி.. கொண்டாடிய அனுஷ்கா

Virat Kohli Bowling
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூரு நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய நெதர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 410/4 ரன்கள் குவித்து உலக கோப்பையில் தங்களுடைய 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, கேஎல் ராகுல் 102 என டாப் 5 வீரர்களும் பெரிய ரன்கள் குவித்தனர். சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 வீரர்களும் 50+ ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

- Advertisement -

மேஜிக் விக்கெட்:
அதை தொடர்ந்து 411 என்ற கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு பரேசி ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் 5 ரன்னில் அவுட்டாக 2வது விக்கெட்டிக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலின் ஆக்கர்மேன் 35 ரன்களில் குல்தீப் சுழலில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சவாலை கொடுத்த மேக்ஸ் ஓ’தாவுத் 30 ரன்களில் ஜடேஜா சுழலில் கிளீன் போல்ட்டானார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் நிதானமாக விளையாட முயற்சித்த போது பெங்களூரு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “விராட் கோலிக்கு பவுலிங் கொடுங்கள்” என்று கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு விண்ணதிற முழங்கி வெளிப்படையான கோரிக்கை வைத்தனர். சொல்லப் போனால் கடந்த சில போட்டிகளாகவே ரசிகர்கள் மைதானத்தில் வைத்து வரும் இந்த கோரிக்கையை ரோகித் சர்மாவும் ஏற்று விராட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய விராட் கோலி 25வது ஓவரின் 3வது பந்தில் எட்வர்ட்ஸ் 17 ரன்களில் கொடுத்த எட்ஜை கேஎல் ராகுல் கச்சிதமாக பிடித்ததால் ஆச்சரியமான விக்கெட்டை எடுத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக பேட்ஸ்மேனாக ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் அடித்ததை மட்டுமே பார்த்து பழகிய ரசிகர்கள் விராட் கோலியின் விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க: பெங்களூருவை தனது கோட்டையாக்கிய ரோஹித்.. கங்குலி, சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்து 3 புதிய வரலாற்று சாதனை

அவர்களைப் போலவே மைதானத்தில் இருந்து பார்த்த அனுஷ்கா சர்மாவும் தம்முடைய கணவர் 7 வருடங்கள் கழித்து விக்கெட் எடுத்ததை வியப்புடன் கொண்டாடினார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை விராட் கோலி எடுத்திருந்தார். இந்த நிலைமையில் நெதர்லாந்து 172/6 என்ற நிலையுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement