
நியூசிலாந்துக்கு எதிராக வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 2026 புத்தாண்டை வெற்றிகரமாகத் துவங்கியது. வதோதராவில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய இந்தியா 49 ஓவரில் 306/6 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 93, கேப்டன் கில் 56, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்கள். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இதுவரை வென்ற ஆட்டநாயகன் விருதுகளின் எண்ணிக்கை தமக்கு நினைவில்லை என்று தெரிவிக்கும் விராட் கோலி அவற்றையெல்லாம் தம்முடைய அம்மாவுக்கு நினைவுப் பரிசாக அனுப்பி வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் தம்மை பார்ப்பதற்காக தமக்கு முன் அவுட்டாகும் பேட்ஸ்மேனின் விக்கெட்டை இந்திய ரசிகர்கள் கொண்டாடுவது தமக்கு பிடிக்கவில்லை என்றும் விராட் கோலி கூறியுள்ளார். மேலும் இப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வாய்த்த தனது திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை எவ்வளவு விருதுகள் வென்றுள்ளேன் என்பதை எனக்குத் தெரியவில்லை. அவற்றை என்னுடைய அம்மாவுக்கு அனுப்புவேன். அவர்கள் அதற்காக பெருமையடைவார்கள்”
“என்னுடைய மொத்த பயணத்தையும் திரும்பிப் பார்க்கையில் அது கனவு நிஜமானதற்கு கொஞ்சமும் குறைவில்லாததாக இருக்கும். என்னுடைய திறமைகளை அறிந்த நான் எனது இடத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கடவுள் எனக்கு நிறைய கொடுத்துள்ளார். அதற்கு நான் நிறைய நன்றியுணர்வைக் கொண்டுள்ளேன். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் விளையாடும் விதத்திற்கு சாதனைகளைப் பற்றி சிந்திப்பதில்லை”
“ஒருவேளை நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் இன்னும் கொஞ்சம் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் எப்போதும் ஆதரவு கொடுக்கும். அணியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வருவதே முக்கிய விஷயமாகும். 3வது இடத்தில் விளையாடுவதன் அடிப்படை ஐடியா என்னவெனில், சூழ்நிலை கடினமாக இருக்கும் பட்சத்தில் அதிரடியாக விளையாடாமல் பதிலடி கொடுக்க முயற்சிப்பேன். இருப்பினும் இன்று முதல் 20 பந்துகளில் வேகமாக பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று கருதினேன்”
இதையும் படிங்க: உண்மையாவே இந்த திறமையைக் கொண்டுள்ள ராணா.. இந்திய அணியின் புதிய கண்டுபிடிப்பு தான்.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“எனக்கு முன் அவுட்டாகும் பேட்ஸ்மேன் விக்கெட் கொண்டாடப்படுவதை நான் நன்றாக உணரவில்லை. அதை எம்எஸ் தோனியிடமும் பார்த்துள்ளேன். அதை ரசிகர்கள் உற்சாகத்தால் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் என்னுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்த விரும்புகிறேன். மக்கள் என்னை பார்ப்பதற்காக நன்றி உடையவனாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். அவர்களது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்ப்பது என்னுடைய முகத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என்று கூறினார்.