இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. ஜனவரி 11ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84, ஹென்றி நிகோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய இந்தியா 49 ஓவரில் 306/6 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 93, கேப்டன் கில் 56, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
புதிய கண்டுபிடிப்பு:
முன்னதாக இந்திய அணியில் கௌதம் கம்பீர் ஆதரவுடன் விளையாடும் ஹர்ஷித் ராணா பெரும்பாலான போட்டிகளில் தடுமாறியதால் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய அவர் இப்போட்டியில் 10 ஓவரில் 65 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். குறிப்பாக 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 100+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நியூசிலாந்து ஜோடி என்ற சாதனையுடன் டேவோன் கான்வே – ஹென்றிஸ் நிக்கோலஸ் அச்சுறுத்தலைக் கொடுத்தார்கள்.
அப்போது அவர்களை அவுட்டாக்கிய ராணா இந்தியாவுக்கு ஓப்பனிங் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். இந்நிலையில் மிடில் ஓவர்களில் நிறைய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறுவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கே விக்கெட்டுகள் எடுக்கும் திறமை கொண்டுள்ள ராணா உண்மையாகவே இந்திய வேகப்பந்து வீச்சு துறைக்கு புதிய கண்டுபிடிப்பாக கிடைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
மஞ்ரேக்கர் பாராட்டு:
இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷித் ராணா இந்திய அணியின் பவுலிங் துறையை பொறுத்த வரை நல்ல கண்டுபிடிப்புகளில் ஒருவர். அவரால் போட்டியின் அனைத்து கட்டங்களிலும் பவுலிங் செய்ய முடிகிறது. கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் புதிய பந்தை அனுபவமிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்தினார் என்பதை நாம் பார்த்தோம்”
இதையும் படிங்க: 20வது முறை.. சேசிங்கில் கில்லி என்பதை காட்டிய இந்தியா.. நியூசியை வீழ்த்தி புத்தாண்டை வெற்றியுடன் துவக்கம்
“அதுவே 2 அல்லது 3வது ஸ்பெல்லை வீச வரும் போது அவர் அடித்து நொறுக்க நினைக்கக்கூடிய எதிரணி பேட்ஸ்மேன்களை தன்னுடைய டி20 திறமையால் அவுட்டாக்க வலையை அமைக்கிறார். மொத்தத்தில் சமீப காலங்களில் மிடில் ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறிய விக்கெட் எடுக்கும் திறமையை அவர் தன்னுடைய பந்து வீச்சில் சேர்த்துள்ளார். எனவே அவருடைய இணைப்பு இந்திய பவுலிங் முழுமையானதாக காட்சிப்படுத்துகிறது” என்று கூறினார்.



