இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு குஜராத்தில் உள்ள வதோதராவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஹென்றி நிக்கோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் குவித்தனர். மிடில் ஆர்டரில் வில் எங் 12, கிளன் பிலிப்ஸ் 12, மிட்சேல் ஹே 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வல் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் டேரில் மிட்சேல் அதிரடியாக விளையாடி 84 (71) ரன்கள் விளாசி அசத்தினார்.
நியூஸிலாந்து அசத்தல்:
இறுதியில் கிரிஸ்டன் கிளார்க் 24*, கைல் ஜெமிசன் 8* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் நியூசிலாந்து 300/8 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக 301 ரன்களை தூரத்திய இந்திய அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 26 (29) ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் கேப்டன் சுப்மன் கில் நிதானமாக விளையாடினார். அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்தார். அவருடன் சேர்ந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கில் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்க்கு அதிரடியாக விளையாடினார்.
இந்தியா வெற்றி:
இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய விராட் கோலி 54வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 93 (91) ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 (5) ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் அரை சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 49 (47) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றுத்துடன் சென்றதால் போட்டியில் பரபரப்பு உண்டானது.
ஆனால் அப்போது வந்த ஹர்ஷித் ராணா முக்கியமான 29 (23) ரன்களை அதிரடியாக குவித்து அவுட்டானார். அதை வீணடிக்காமல் கேஎல் ராகுல் 29* (21), சுந்தர் 7* (7) ரன்கள் எடுத்து 49 ஓவரில் இந்தியாவை 306/6 ரன்களை குவிக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் – விளையாடாதது ஏன்?
இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 20வது முறையாக 300+ ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்து இந்தியா வென்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 15 முறை சேசிங் செய்து 2வது இடத்தில் இருக்கிறது. அதனால் 2026 புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியுள்ள இந்திய அணி 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.



