நீங்கல்லாம் சும்மா, அவர் தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் – சமயம் பாத்து பாபர் அசாமை தாக்கிய முகமது அமீர்

Mohammed Amir PAK
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 போட்டிகளில் 7 வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில் அபாரமாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 100 (62) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (தலா 6) அடித்த கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்த அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (7) அடித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார்.

முன்னதாக ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளில் டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக ஜொலித்து வருகிறார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்காமல் அவர் தடுமாறிய காலகட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.

- Advertisement -

உண்மையான கிங்:
அதனால் விராட் கோலியை விட சிறந்தவர் சச்சினுக்கு நிகரானவர் என்று அவரை கொண்டாடி அந்நாட்டை சேர்ந்தவர்கள் டான் ப்ராட்மேனுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என புகழ் பேசி வருகிறார்கள். இருப்பினும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக அடித்து நம்பர் ஒன் இடத்தை அடைந்த பாபர் அசம் பெரும்பாலும் அணியின் வெற்றிக்கு பங்காற்றுவதில்லை என்று எதிரணி ரசிகர்கள் ஆதாரங்களுடன் நிரூபித்தார்கள். சொல்லப்போனால் 2022 காலண்டர் வருடத்தில் அவரது தலைமையில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக ஒரு தொடரில் கூட வெல்லாமல் படுதோல்விகளை சந்தித்ததே அதற்கு வெளிப்படை சாட்சியாக அமைந்தது.

அதனால் சோயப் அக்தர் போன்ற சில பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே பாபர் அசாமை சமீப காலங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மறுபுறம் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பிய விராட் கோலி கடந்த 8 மாதங்களில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து கிரிக்கெட்டிலும் சதமடித்து தற்போது ஐபிஎல் தொடரிலும் 4 வருடங்கள் கழித்து 3 இலக்க ரன்களை தொட்டு முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதிலும் 2022 டி20 உலக கோப்பையில் தோற்றாலும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் 82* ரன்கள் விளாசி சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இந்திய ரசிகர்களின் தலைநிமிரச் செய்த அவர் நேற்றைய முக்கியமான போட்டியிலும் பெங்களூருவுக்கு சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் அப்படி அழுத்தமான முக்கிய போட்டிகளில் அசத்தும் விராட் கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் என்று ட்விட்டரில் பாராட்டியுள்ள பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் அவருக்கு அருகே பாபர் அசாம் உள்ளிட்ட யாரும் நெருங்க முடியாது என சமயம் பார்த்து தாக்கியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தலைமுறையில் விராட் கோலியுடன் வேறு எந்த வீரரையும் ஒப்பிடுவதற்கில்லை. விராட் கோலியின் சாதனைகளும் அவர் விளையாடும் ஷாட்டுகளும் நம்ப முடியாததாகும். கிளாஸ் நிறைந்த அவர் கடினமான சூழ்நிலையில் அசத்தும் பெரிய வீரர் என்பதை நாம் அறிவோம். ஐபிஎல் தொடரில் 4 வருடங்கள் கழித்து தன்னுடைய 6வது சதத்தை அடித்துள்ள அவர் தான் உண்மையான கிரிக்கெட்டின் கிங் ஆவார்”

இதையும் படிங்க:நான் பேன்சியான ஷாட்டை எல்லாம் பெருசா ஆட மாட்டேன். ஏன் தெரியுமா? – விராட் கோலி கொடுத்த விளக்கம்

“இதே போல அவர் இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் எவ்வளவு சாதனைகளை உடைப்பார் என்று நமக்கு தெரியாது. மேலும் தற்போதைக்கு பெங்களூருவின் நாக் அவுட் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அவர்கள் அதற்கு தகுதி பெற்று ஃபைனலில் கோப்பையை வெல்வார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement