2011இல் சச்சின் மாதிரி ஸ்டேட்டஸ் கொண்டிருக்கும் அவர் இந்தியாவுக்கு 2023 உ.கோ ஜெயிச்சு கொடுப்பாரு – ஹர்பஜன் நம்பிக்கை

Harbhajan Singh
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றின் முதல் முறையாக முழுவதுமாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மேலும் இந்த தொடரில் கோப்பையை வென்று விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் 36 வயதை தாண்டியுள்ள ரோகித் சர்மா இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாத நிலையில் 2027இல் 40 வயதை தொட்டு விடுவார் என்பதால் இதுவே அவருக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்ற விராட் கோலி 2011 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரராக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆனாலும் சச்சினையே மிஞ்சும் அளவுக்கு கடந்த 2013க்குப்பின் விஸ்வரூப பேட்ஸ்மேனாக நிறைய சாதனைகளை படைத்து வரும் அவர் சீனியர் கிரிக்கெட் வீரராக உருவெடுத்த பின் எந்த ஐசிசி கோப்பையையும் வென்று கொடுக்கவில்லை என்ற அவப்பெயர் இருந்து வருகிறது.

சச்சின் மாதிரி:
சொல்லப்போனால் 2019இல் கேப்டனாக செயல்பட்டு வழக்கம் போல லீக் சுற்றில் தோல்வியை சந்தித்த அவர் தற்போது சாதாரண வீரராக சுதந்திரமாக விளையாட உள்ளார். இந்நிலையில் 5 முந்தைய தொடர்களில் தோல்வியை சந்தித்தாலும் 2011 உலக கோப்பையில் தன்னுடைய கடைசி முயற்சியில் சச்சின் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தது போல இம்முறை விராட் கோலி சொந்த மண்ணில் சாதித்து காட்டுவார் என்று நம்புவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக சச்சின் போலவே தரமும் அந்தஸ்தும் தற்போது விராட் கோலியிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு அவர் மிகப்பெரிய வேலை செய்ய வேண்டும். மேலும் 2011 உலக கோப்பையில் சச்சின் இருந்ததைப் போன்ற அந்தஸ்தை அவர் தற்போது கொண்டுள்ளார். இருப்பினும் அதற்காக அவர் மீது இந்திய அணியினர் அழுத்தத்தை போடுவதற்கு பதிலாக அவரிடமிருந்து அழுத்தத்தை எடுக்கும் வகையில் முக்கிய முடிவுகளை எடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதாவது இதர வீரர்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்தால் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தால் அசத்தலாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்”

- Advertisement -

“எப்போதுமே தன்னுடைய சொந்த ஆட்டத்தை விளையாடும் போது அவரை யாராலும் நிறுத்த முடியாது. அந்த வகையில் அவர் சாம்பியன் வீரர் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார். முன்னதாக 2011இல் சச்சினுக்காக உலக கோப்பையை வென்றது போல இம்முறை விராட் கோலிக்காக இந்திய அணியினர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பாடுபட வேண்டுமென சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Harbhajan Singh

அந்த நிலையில் ஒருவேளை இத்தொடரில் விராட் கோலி சுமாராக செயல்பட்டாலும் பாண்டியா, சூரியகுமார், கில் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த அழுத்தத்தை தஉடைத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “ரசிகர்கள் அனைவரும் அவரை சேஸ் மாஸ்டர் என்று சொல்கின்றனர். ஆனால் சேசிங் செய்தாலும் அல்லது முதலில் பேட்டிங் செய்தாலும் அவர் எப்போதுமே சிறந்தவர் என்று நான் சொல்வேன். தற்சமயத்தில் அவருடன் ஒப்பிடுவதற்கு யாருமில்லை”

இதையும் படிங்க:சர்பராஸ் கானை அடுத்து இந்திய அணித்தேர்வின் மீதான தனது அதிருப்தியினை வெளிப்படுத்திய – இந்திய வீரர்

“இருப்பினும் அவர் பெரிய போட்டிகளில் சற்று சுதந்திரமாக விளையாட வேண்டும். மேலும் விராட் அவுட்டானால் கதை முடிந்தது என்று சொல்லாதீர்கள். அப்படி நடக்காது ஏனெனில் ஒருவேளை விராட் அவுட்டானாலும் நம்மிடம் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சுப்மன் கில் போன்ற போராடும் வீரர்கள் இருப்பதால் அதை சமாளிக்க முடியும். அதனால் அழுத்தம் சற்று குறையும் என்பதால் இம்முறை விராட் கோலி தன்னுடைய ஸ்டைலில் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement