யாராலும் முடியாத வினோதம்.. மேக்ஸ்வெலின் மாஸ் ஆட்டத்தை வியந்து பாராட்டிய விராட் கோலி

Virat Kohli Maxwell
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா போராடி வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் இப்ராஹீம் ஜாட்ரான் 129* ரன்கள் எடுத்த உதவியுடன் 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், ஜோஸ் இங்லீஷ், மார்ஷ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே சரிந்த ஆஸ்திரேலியா நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.

- Advertisement -

விராட் கோலி பாராட்டு:
அதற்கு எதிர்ப்புறம் கேப்டன் பட் கமின்ஸ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் தொடர்ந்து அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து விளையாடியதால் காயத்தை சந்தித்த அவர் அதற்காக அசராமல் தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தம்முடைய கையை பயன்படுத்திய சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்தார்.

அந்த வகையில் 21 பவுண்டரி 10 சிக்சர் அடித்த அவர் உலகக் கோப்பை வரலாற்றிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சேசிங் செய்கையில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை படைத்து 201* (128) ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவுக்கு காலத்திற்கும் மறக்க முடியாத அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடன் கமின்ஸ் 12* ரன்கள் எடுத்து இந்த மகத்தான வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

மறுபுறம் அற்புதமான துவக்கத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பி கையில் வைத்திருந்த வெற்றியை தாரை பார்த்தது. ஆனால் அவர்களிடம் வெற்றியை தட்டி பறிக்கும் அளவுக்கு காயத்துடன் மனம் தளராமல் போராடிய மேக்ஸ்வெல் விளையாடிய இந்த இன்னிங்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்தது என்று ஜாம்பவான் சச்சின் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: இப்படி ஒரு இன்னிங்ஸ்ஸை என் லைஃப் டைம்ல பாத்தது இல்ல. மேக்ஸ்வெல்லை பாராட்டி – சச்சின் வெளியிட்ட வாழ்த்து

இந்நிலையில் “உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும். வினோதமான கிளன் மேக்ஸ்வெல்” என்று விய்ப்பு குறியீடுகளையும் சேர்த்து பதிவிட்டு இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த அபாரமான ஆட்டத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியப்புடன் பாராட்டியுள்ளார். குறிப்பாக உலகிலேயே இது போன்ற சூழ்நிலையில் காயத்தையும் தாண்டி உங்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் தன்னுடைய நண்பராக இருக்கும் மேக்ஸ்வெலை இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement