
நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் குவித்துள்ளார். மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் ரன்களை குவித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
முன்னதாக யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் விராட் கோலி சதமடிக்க முடியாமல் தடுமாறினார். அப்போது அவரை அணியிலிருந்து நீக்குமாறு உச்சகட்டமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது மனம் தளராமல் போராடிய விராட் கோலி 2022 ஆசியக் கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார்.
அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி செமி ஃபைனல் வரை அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறினார். அப்போது அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்குமாறு பலரும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ரோஹித் சர்மாவின் ஆதரவுடன் தொடர்ந்து ஓப்பனிங்கிலேயே விளையாடிய விராட் கோலி முக்கியமான ஃபைனலில் 76 (59) ரன்கள் குவித்தார்.
அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று தம்மை மீண்டும் சாம்பியன் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரருக்கு பயிற்சியே தேவையில்லை என்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். மனதளவில் வலுவாக இருந்தாலே விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்பதற்கு 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பயிற்சிகளை விட மனநிலை முக்கியம் என்ற நிலையை விராட் கோலி தொட்டுள்ளார். மனதளவில் அவர் எந்தளவுக்கு வலுவான வீரர் என்பதை நாம் அறிவோம். அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ரன்கள் அடிக்காத போது மக்கள் பலவற்றை பேசினார்கள்”
இதையும் படிங்க: ஆண்டர்சன் பரவால்ல.. ஆனா நாட்டுக்காக ஜோ ரூட் அப்படி செய்வாருன்னு எதிர்பாக்கல.. துருவ் ஜுரேல் பேட்டி
“ஆனால் இறுதிப் போட்டியில் யார் ரன்கள் அடித்தார்கள்? விராட் கோலி. அக்சர் பட்டேல் மற்றும் விராட் கோலி ஆகியோரால் தான் இந்தியா 175 ரன்கள் அடித்தது. அந்த வகையில் வீரர்கள் நீண்ட வருடங்கள் விளையாடும் போது களத்தில் எடுக்கும் பயிற்சிகளை விட மனதளவில் தயாராவதே மிகவும் முக்கியம்” என்று கூறினார். அந்த வகையில் அதிக அனுபவத்தை கொண்டிருப்பதாலேயே விராட், ரோஹித்துக்கு 2024 துலீப் கோப்பையில் பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.