இளம் இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜுரேல் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்தியா சரிவை சந்தித்த போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அரை சதமடித்தார். அந்த வகையில் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
இந்நிலையில் அப்போட்டியில் இங்கிலாந்து மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தம்மை ஸ்லெட்ஜிங் செய்ததாக துருவ் ஜுரேல் கூறியுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தம்முடன் ஒன்றாக விளையாடிய ஜோ ரூட் ஸ்லெட்ஜிங் செய்ததை தாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என ஜுரேல் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்காக அப்படி ஸ்லெட்ஜிங் செய்வதாக ரூட் சொன்னதாகவும் ஜுரேல் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்லெட்ஜிங்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த போது விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து வீரர்கள் ரிலாக்ஸாக ஜாலியாக விளையாடினர். அப்போது என்னிடம் வந்த ஆண்டர்சன் நான் உன்னுடைய வீடியோக்களை பார்த்துள்ளேன் இது உன்னுடைய ஆட்டமல்ல என்று கூறினார்”
“ஏனெனில் அப்போது நான் அதிக பந்துகளை எதிர்கொண்டு சிங்கிள்களை எடுத்தேன். அந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து ரன்கள் அடித்தால் ஆண்டர்சன் அமைதியாக இருப்பார் என்று நினைத்தேன். அதன் பின் கவனமாக விளையாடுவதற்கு பதிலாக நேர்மறையாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன்”
ஜோ ரூட் ஸ்லெட்ஜிங்:
“அதனால் சோயப் பஷீரை நான் அதிரடியாக எதிர்கொண்டேன். என்னுடைய இடத்தில் போட்டால் யாரும் என்னை தடுக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். பின்னர் குல்தீப் யாதவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தேன். அன்றைய நாள் முடிவில் 30 ரன்கள் எடுத்திருந்த நான் மறுநாள் பழைய பந்தில் அரை சதமடிக்கலாமா என்று யோசித்தேன். அடுத்த நாளில் 36 ரன்கள் இருந்த போது மீண்டும் ஆண்டர்சன் பந்து வீச வந்தார்”
இதையும் படிங்க: சென்னை மண்ணில் வரலாற்று சாதனையை நிகழ்த்த இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு – விவரம் இதோ
“அப்போது ஆக்ரோஷமாக பந்து வீசிய அவர் தொடர்ச்சியாக என்னை ஸ்லெட்ஜிங் செய்தார். ஆங்கிலேய வடிவத்தில் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. அவருடன் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். அதில் ஐபிஎல் தொடரில் என்னுடன் ஒன்றாக விளையாடியும் ஜோ ரூட் என்னை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அவரிடம் ஏன் என்னை ஸ்லெட்ஜிங் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நாம் அனைவரும் தற்போது நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று அவர் சொன்னார்” எனக் கூறினார்.



