ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (31) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் 81/3 என ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினர்.
இந்தியா வெல்லுமா:
அந்த வகையில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 29 ஓவர்கள் வரை 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்மன்ஷிப் அமைத்து ஓரளவு இந்தியாவை காப்பாற்றிய போது விராட் கோலி 54 (63) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் இந்த 54 ரன்களையும் சேர்த்து 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய அனைத்து வகையான ஐசிசி தொடர்களின் ஃபைனல்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சங்ககாராவின் சாதனையை அவர் உடைத்தார்.
இதற்கு குமார் சங்ககாரா 320 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது விராட் கோலி அனைத்து வகையான ஐசிசி தொடர்களின் ஃபைனல்களில் 330 ரன்கள் குவித்து இந்த உலக சாதனை படைத்துள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்திருந்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரின் செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
அந்த நிலைமையில் வந்த ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராகுல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 (107) ரன்களில் நேரத்தில் ஆட்டமிழந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் எதிர்புறம் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடியதால் சூப்பர் ஃபினிஷிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பேவரைட் ஷாட்டால் வந்த வினை.. சுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம். – பைனல் மேட்ச்ல இப்படியா நடக்கனும்?
ஆனால் அவரும் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இறுதியில் ஷமி 6, பும்ரா 1, குல்தீப் 10*, சிராஜ் 8 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்தியா 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் இன்றையா நாளில் பேட்டிங்க்கு சவாலாகவும் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்து வருகிறது. எனவே இந்தியா இப்போட்டியில் வெல்வது சிறப்பான ஃபீல்டிங் உதவியுடன் பவுலர்களின் கையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.